இனி இதுக்கும் அபராதம் கட்டணுமா! இந்த ரூல்ஸ் இவ்ளோ நாளா தெரியாம போச்சே! டயர் கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்!
கார்களின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக டயர்கள் (Tyres) உள்ளன. இன்ஜின் ஆயில் ஆகியவற்றை போன்று, டயர்களையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்ற வேண்டும். அப்போதுதான் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக 'பால்ட் டயர்கள்' (Bald Tyres) உடன் காரை ஓட்ட கூடாது.
அதாவது வழுக்கை தலை எப்படி இருக்கும்? முடி இல்லாமல் இருக்கும் அல்லவா? அதேபோல் 'த்ரெட்' (Tread) இல்லாமல், மிகவும் மோசமான நிலையில் உள்ள டயர்கள்தான் 'பால்ட் டயர்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 'பால்ட்' என்றால், வழுக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவை 'பால்ட் டயர்கள்' என அழைக்கப்படுகின்றன.

'பால்ட் டயர்கள்' உடன் நீங்கள் காரை ஓட்டினால், 'க்ரிப்' கிடைக்காமல் போகலாம். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஈரமான சாலைகளில், 'பால்ட் டயர்கள்' விபத்துக்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதுதவிர 'பால்ட் டயர்கள்' இருந்தால், நீங்கள் பிரேக் பிடித்த உடன் கார் நிற்காது. இதுவும் சாலை விபத்துக்களுக்கு காரணமாக அமையும்.
அத்துடன் நல்ல கண்டிஷனில் உள்ள டயர்களை விட, 'பால்ட் டயர்கள்'-தான் வெடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகமாக கொண்டுள்ளது. எனவேதான் 'பால்ட் டயர்கள்' உடன் காரை ஓட்ட கூடாது என கூறுகிறோம். ஆனால் இவ்வளவு அபாயங்கள் இருக்கும்போதிலும், இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், வழுக்கை டயர்களுடன் நிறைய பேர் காரை ஓட்டி கொண்டுள்ளனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால், உடனடியாக டயர்களை மாற்றி விடுங்கள். ஏனெனில் வழுக்கை டயர்களுடன் காரை ஓட்டிய ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது! இதற்கு முன் இப்படி ஒரு சம்பவத்தை உண்மையில் யாருமே கேள்விபட்டதில்லை. எனவே நாடு முழுக்க அனைவரின் கவனத்தையும் இந்த சம்பவம் ஈர்த்துள்ளது.
நாம் தற்போது பேசி கொண்டுள்ள இந்த சம்பவம் கர்நாடகா (Karnataka) மாநிலம் மைசூர் (Mysore). சம்பவத்தன்று காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகுந்தன் என்பவர் காரில் வந்துள்ளார். அந்த காரை நிறுத்தும்படி காவல் துறை அதிகாரிகள் சைகை காட்டியுள்ளனர்.
ஆனால் முகுந்தன் பிரேக் பிடித்தும் கூட அந்த கார் நிற்கவில்லை என கூறப்படுகிறது. சுமார் 200 மீட்டர் தாண்டி சென்றுதான் அந்த கார் நின்றுள்ளது. டயர்கள் மோசமான கண்டிஷனில் இருந்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் ஒரு டூவீலர் மீது மோதுவது போல் சென்றுதான், அந்த கார் நின்றுள்ளது.
எனவே காவல் துறை அதிகாரிகள் அந்த காரின் உரிமையாளர் முகுந்தனுக்கு 500 ரூபாயை அபராதம் (Fine) விதித்து ரசீது வழங்கியுள்ளனர். அந்த ரசீதில், பால்ட் டயர்கள் உடன் கார் ஓட்டியதால் அபராதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டார் ஆஃப் மைசூர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். வழுக்கை டயர்களின் அபாயத்தை கார் உரிமையாளர்கள் உணர்ந்து கொள்ள இந்த நடவடிக்கை ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. எனவே இதனை ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையாகவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








