பரபரப்பாக பெட்ரோல் பங்குக்கு வந்த இளைஞர்... கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் மரண பயத்தை காட்டிட்டாரு!!
உலகத்தையே இன்று ஆண்டுக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்கள் என்றால் அது மிகையில்லை. ஏனெனில், பிறந்த குழந்தையில் இருந்து வயதான முதியவர்கள் வரையில் செல்போன் இல்லாதவர்களை காண்பதே மிக அரிதானதாக மாறிவிட்டது. இதனால், அதற்கேற்ப சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களிலும் யார் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெறுவது என்பதில் போட்டிகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவாக, மற்றவர்களிடம் இருந்து ஸ்பெஷலானதாக தெரிய வேண்டும் என்பதற்காக புது, புது கான்செப்ட்களில் நிறைய பேர் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
அந்த முயற்சியில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது, சிலர் உயிரிழந்தும் கூட உள்ளனர். அதேபோல், சிலர் சட்டத்தின் பிடியில் சிக்கி, போலீசாரிடம் பெரிய தொகையை அபராதமாக செலுத்திய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. அவ்வாறான ஒரு சம்பவத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக, வித்தியாசமாக யோசித்து காரில் டீசலை நிரம்ப, நிரம்ப பிடித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். காரில் முழு டேங்கிற்கும் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த சம்பவத்தில், காரின் டேங்கில் டீசல் முழுவதுமாக நிரம்பிய போதிலும், தொடர்ந்து வழிய வழிய டீசலை இந்த நபர் நிரப்பியுள்ளார்.
அதாவது, ஒரு கட்டத்திற்கு மேல் டீசல் காரில் இருந்து கொப்பளித்து தரையில் வழிந்தோடியது. காரில் எரிபொருளை சாதாரணமாக நிரப்பினால், இணையத்தில் கவனத்தை பெற முடியாது என்பதால், இவ்வாறு அவர் செய்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ அவர் எதிர்பார்த்ததை போல நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது. ஆனால், அதேநேரம் இணையவாசிகளின் கண்டனங்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.

சில வெளிநாடுகளை போல் இல்லாமல், இந்தியாவில் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்கென பணியாட்கள் இருப்பார்கள். வாகனத்தின் எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டி சொன்னால், அதற்கென இருக்கும் அளவீட்டு கருவியை பயன்படுத்தி சரியாக டேங்க் முழுவதற்கும் எரிபொருளை நிரப்புவர். ஆனால், இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கையில் இருந்து குழாயை பிடிங்கி இந்த நபர் அடாவடியாக தனது காருக்கு டீசலை நிரப்பி உள்ளார்.
முதலில் இவ்வாறு செய்வதே தவறு. அடுத்து, டேங்க் முழுவதுமாக நிரம்பிய பின்னரும் குழாயை ஆஃப் செய்யாமல் தொடர்ந்து டீசலை நிரப்பியுள்ளார். டேங்கில் இருந்து கொப்பளித்த டீசல், காரின் சக்கரம், மட்கார்ட் உள்ளிட்டவற்றை கடந்து தரையில் வழிந்தோடுவதை வீடியோவில் காணலாம். பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ ராஜஸ்தான் போலீசாரின் கண்ணில் பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞரையும், பெட்ரோல் பங்க் ஊழியரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டீசலை வீணடித்துள்ளார் என்பது ஒரு குற்றம் என்றால், அதைவிட பெரிய குற்றம் என்னவென்றால் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய டீசலை அதிகளவில் கீழே சிந்தியது ஆகும். டீசல் தீப்பற்றிக் கொள்ள தீக்குச்சியை கொளுத்தி போட வேண்டும் என்றுகூட அவசியமில்லை, காரின் என்ஜின் வெப்பத்தினால் கூட தீ உருவாகலாம்.
ஒருவேளை தீ உருவாகி இருந்தால், அது பெரிய விபத்துக்கு வழி வகுத்து இருக்கும். ஏனெனில், காரின் டேங்க் முழுவதுமாக டீசல் உள்ளது. அதைவிட முக்கியமாக, இந்த சம்பவம் எரிபொருள் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஆதலால், இத்தகைய செயல்கள் ஈடுப்படுவோரின் உயிருக்கு மட்டுமின்றி, அருகில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிருக்கும் பெரிய ஆபத்தாக சென்று முடியலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு காரில் இருந்து டீசலை கீழே சிந்தியது மட்டுமின்றி, இந்த ஸ்கார்பியோ-என் காரின் சன்ரூஃப் வழியாக வெளியே எட்டிப் பார்த்தப்படி இந்த இளைஞர் பயணம் செய்துள்ளதையும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம். மேலும், இந்த இளைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்து பார்த்ததில், இதேபோன்று பல்வேறு ஆபத்தான செயல்களிலும் இந்த நபர் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









