போலீஸ் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...
போலீஸ் காரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதால், இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் டிக் டாக் மோகம் ஆட்கொண்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என பாலின வேறுபாடுகளையும் கடந்து அனைவரின் கவனத்தையும் டிக் டாக் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் டிக் டாக் வீடியோ ஒன்று, இந்தியா முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் சட்டை அணியாமல் இருக்கும் இளைஞர் ஒருவர் மாருதி சுஸுகி எர்டிகா காரை மெதுவான வேகத்தில் ஓட்டி வருகிறார். திடீரென காரை விட்டு இறங்கிய அந்த இளைஞர், மேற்கூரையின் மீது ஏறுகிறார். இதன்பின் மேற்கூரையில் சில புஷ்அப்களை எடுத்துவிட்டு மீண்டும் தரையில் குதிக்கிறார். அதன்பின் மீண்டும் காருக்குள் ஏற முயல்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைந்து விட்டது.

சம்பந்தப்பட்ட இளைஞர் மேற்கூரையில் புஷ்அப் செய்தபோது, காருக்குள் யாரும் இல்லை. அது தானாகவே இயங்கி கொண்டிருந்தது. இதற்கே அதிர்ச்சியாக வேண்டாம். வீடியோவில் காணக்கூடிய காரில், டெல்லி போலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள இளைஞரை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. அவர் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

ரிஜிஸ்ட்ரேஷன் தகவல்களை வைத்து பார்க்கையில், இந்த கார் ஜே.பி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. ஜே.பி.ஷர்மா டெல்லி போலீசில் பணியாற்றுகிறாரா? அல்லது இது டெல்லி போலீசார் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ காரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலை தளங்கள் மூலம் டெல்லி போலீசாருக்கு புகார்கள் பறந்து கொண்டுள்ளன.

இதனை விசாரிப்பதாக டெல்லி போலீசாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசார் ஏராளமான மாருதி சுஸுகி எர்டிகா கார்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கார் அவர்களின் அதிகாரப்பூர்வ காரா? அல்லது இந்த காரின் உரிமையாளர் டெல்லி போலீசின் ஸ்டிக்கரை முறைகேடாக பயன்படுத்தியுள்ளாரா? என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

அதே சமயம் இந்த வீடியோவில் காணக்கூடிய காரின் மேற்கூரையில் போலீசாரின் அதிகாரப்பூர்வ கார்களை போன்று, ஃப்ளாஷர்கள் மற்றும் சைலென்சர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வீடியோவை அப்லோட் செய்த நபரின் டிக்டாக் ப்ரொபைல் மூலமாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த வீடியோவை உருவாக்கிய நபர்தான் அப்லோட் செய்தாரா? அல்லது வேறு எங்கேயாவது கிடைத்த வீடியோவை வெறுமனே அப்லோட் செய்தாரா? என்பதும் இன்னும் தெரியவில்லை. விசாரணை முடிவில்தான் உறுதியான தகவல்கள் தெரியவரும். இதனிடையே தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
காரின் மேற்கூரையில் இந்த இளைஞர் செய்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது. அவர் ஸ்டண்ட் செய்ய காரை விட்டு வெளியேறியபோது, காரை கட்டுப்படுத்த ஒருவர் கூட இல்லை. அது தானாகவே இயங்கியது. அனேகமாக இது டீசல் இன்ஜின் எர்டிகா காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக டீசல் இன்ஜின்களில் லோ-எண்ட் டார்க் அதிகமாக இருக்கும்.

லோயர் கியர்களில் கிளட்ச்சை முழுவதுமாக ரிலீஸ் செய்த பிறகும், இன்ஜின் ஸ்டாப் ஆகாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில்தான் உள்ளே யாரும் இல்லாமலேயே கார் இயங்கியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இது மிகவும் அபாயகரமான ஸ்டண்ட். இது போன்ற ஸ்டண்ட்களை நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








