வேற வழி தெரியல ஆத்தா... இரயிலையே எதிர்த்து போறீங்க என்றால் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் சமாளிக்க முடியும்!
இணைய மோகம் நாளுக்கு நாள் மனிதர்களின் எண்ணோட்டத்தை வெகுவாக மாற்றி வருகிறது. சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும், கமெண்ட்களையும் பெறுவதற்காக பலர் விசித்திரமான காரியங்களில் ஈடுப்படுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இங்கு ஒரு இளைஞர் இரயில் தண்டவாளத்தில் பைக் உடன் செய்த செயல் அதிர்ச்சியை தாண்டி, அவர்மீது கடும் கோபத்தை கிளப்புகிறது. இணையத்தில் பலரது கண்டனங்களை பெற்றுள்ள அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஒரு காலத்தில், 100 மீட்டர் தூரத்தில் இரயில் வருகிறது என்றாலே இருக்கும் இடத்தில் இருந்து 10 அடி பின்னோக்கி சென்றனர். அதன்பின், பின்னோக்கி சென்ற காலம் மாறி, ஓடும் இரயிலில் ஏறும் பழக்கம் நம் மக்களிடையே தொற்றிக் கொண்டது. மற்றவர்களது கவனத்தை பெறுவதற்காக இப்போதும் இளைஞர்கள் பலர் அவ்வாறு ஓடும் இரயில்களில் ஏறுவதை பார்க்க முடியும்.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகரித்த பின்னர், ஏன் எதற்கு என்றே தெரியாமல் இரயில் உடன் பலர் விசித்திரமான சாகசங்களில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் சிலரது உயிரும் போய் உள்ளது. இருப்பினும், இவ்வாறான செயல்களில் ஈடுப்படுபவர்கள் தொடர்ந்து புதிது புதியதாக வந்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் செய்த செயல் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ளது, நவிபேட் என்கிற பகுதி ஆகும். கிட்டத்தட்ட மஹாராஷ்டிரா மாநில எல்லைக்கு அருகே அமைந்துள்ள நவிபேட் ஆனது நிசாமாபாத்தில் உள்ள முக்கியமான வணிக நகரங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நவிபேட்டிற்கு அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் தான், தர்யாபுர் ஆகும். இந்த கிராமத்திற்கென தனியாக இரயில் நிலையம் கிடையாது.

ஏனெனில், இரயில் தண்டவாளம் செல்லும் பகுதியில் இருந்து நன்கு தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. தர்யாபுர் கிராமத்திற்கு செல்ல இரயில்வே கேட் கிராஸிங்கை கடந்து செல்ல வேண்டும். இரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடிவிடுவர். ஆதலால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரயில் கடக்கும் வரையில் காத்திருக்க வேண்டும். அவ்வாறு, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் இரயில் கடப்பதற்காக காத்திருந்தனர்.
ஆனால், அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கும் வகையில், இளைஞர் ஒருவர் பைக்கில் தண்டவாளத்தில் சென்றுள்ளார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இரயிலுக்கு நேரெதிராக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அந்த இளைஞர் அதிவேகத்தில் பைக்கில் செல்வதை காணலாம். இந்த வீடியோவில், கொஞ்ச தூரத்திற்கு அப்பால் பனி சூழ்ந்துள்ளதால், இளைஞருக்கு என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை.
நமக்கு கிடைத்த தகவலின்படி, எதிரே வந்த இரயிலுக்கு மிக அருகாமை வரையில் இந்த இளைஞர் பைக்கை ஓட்டி சென்றுள்ளார். நல்லவேளையாக, எதிரே இவ்வாறு ஒரு இளைஞர் வருவதை கேட் கீப்பர் அருகில் உள்ள நவிபேட் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாக அந்த வழியாக வந்துக் கொண்டிருந்த இரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், பைக்கில் இளைஞர் எதிரே வருவதை கண்டதும் இரயில் ஓட்டுனர் சற்று தொலைவிலேயே இரயிலை நிறுத்திவிட்டார்.
பின்னர், இரயில் ஓட்டுனர் மற்றும் அருகே இருந்த மக்கள் சேர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து இரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இளைஞரின் இந்த செயலால், திருப்பதி நோக்கி சென்றுக் கொண்டிருந்த விரைவு இரயில் கிட்டத்தட்ட அரை மணிநேரம் தாமதமாக சென்றது. தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என நிசாமாபாத் இரயில் நிலைய அலுவலகத்தில் வைத்து இளைஞர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இன்றைய கால இளைஞர்களிடம் இணைய மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆதலால், தெலுங்கானாவை சேர்ந்த இந்த இளைஞரும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், பைக் ஓட்டும் அவரது கையில் எந்த மொபைல் போனும் இருப்பதுபோல் தெரியவில்லை. அல்லது, உண்மையில் தற்கொலை முயற்சியாக கூட இருப்பதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








