சினிமாவை பார்த்து இன்னும் எத்தனை பேர் சிக்க போறாங்களோ!! பைக்கை இனி மறந்திட வேண்டியதுதான்...
பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்கில் காதலியை மடியில் அமர வைத்து அழைத்து சென்ற இளைஞர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவரது பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
சினிமா திரைப்படங்கள் நமது வாழ்வில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது அவ்வப்போது சில சம்பவங்களின் மூலம் தெரிய வருகிறது. சினிமாவில் நல்ல திரைப்படங்களும் வருகின்றன என்றாலும், பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகரே புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.

அதேபோல், ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்காக பைக்குகளில் வீலிங் செய்வது, ஒரு கை விட்டு ஓட்டுவது மற்றும் காதல் காட்சிகளில் நடிகையை மடியில் அமர வைத்துக்கொண்டு ஓட்டுவது போன்ற காட்சிகளை வைக்கின்றனர். இந்த காட்சிகளை படமாக்கும் போது பல்வேறு விதமான பாதுகாப்பு உபகரணங்கள், அனுபவமிக்க பைக் ரேசர்கள் மற்றும் அவசர மருத்துவ குழுவை படக்குழு அருகிலேயே வைத்திருக்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஆபத்தான பைக் ஸ்டண்ட் காட்சிகளில் கதாநாயகர் நடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக, வேறொரு டூப் தான் நடிப்பார். ஆனால், இந்த காட்சிகளை பார்க்கும் இளம் தலைமுறையினர் எல்லாவற்றையும் மறந்து சினிமாவில் மயங்கி தாங்களும் நிஜ வாழ்வில் அவ்வாறு செய்து பார்க்கின்றனர்.

இதில் காமெடி என்னவென்றால், திரைப்பட காட்சியை போலவே தங்களது பைக் ஸ்டண்ட் காட்சிகளும் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதற்காக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விடுகின்றனர். இவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோக்களினால் போலீசாரிடம் சிக்கியவர்கள் ஏராளம். அந்த வரிசையில், பெங்களூரில் ஸ்டைலாக காதலியை மடியில் அமர வைத்து பைக் ஓட்டிய இளைஞரை போலீசார் கொத்தாக தூக்கியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஏய்... திரில்லை தேடுபவர்களே, ஸ்டண்ட்களுக்கான மேடை சாலை அல்ல! நீங்கள் உள்பட அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்போம். பொறுப்புடன் வாகனம் ஓட்டுவோம்" என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் நடந்துள்ளது. காதலியை இம்பிரெஸ் செய்ய வேண்டி, இந்த இளைஞர் இவ்வாறு காதலியை மடியில் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணால் முழுவதுமாக இளைஞரின் மடியில் அமர்ந்திருக்க முடியாது. ஆதலால் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
கீழே விழுந்துவிட கூடாது என்பதற்காக இளைஞரின் கழுத்தை அவர் இறுக்க பிடித்தப்படி பயணம் செய்வதை வீடியோவில் காணலாம். ஆதலால், ஒருவேளை பைக் கீழே விழ நேர்ந்தால், இந்த பெண் அவருக்கே தெரியாமல் அவரது காதலரையும் கீழே தள்ளிவிடுவார். பயத்தில் இந்த பெண் இளைஞரின் கழுத்தை கொஞ்சம் இறுக்க பிடித்தாலும், பேலன்ஸ் தவறி இருவரும் கீழே விழ வாய்ப்புள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் நல்லவேளையாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் போலீசாராக இருக்க வாய்ப்புகள் குறைவே. அவர் சாதாரண வாகன ஓட்டியாகவே இருக்க வேண்டும். காருக்குள் இருந்து இந்த வீடியோவை காட்சிப்படுத்தி உள்ளனர். ஆதலால், எங்கிருந்து யாரால் வேண்டுமானாலும் நாம் போலீசாரிடம் சிக்கலாம் என்பதை இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுப்படுபவர்கள் உணர வேண்டும். அதாவது, சாலையில் செல்லும்போது நம்மை சுற்றிலும் கேமராக்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








