காரில் இருந்து பொழிந்த பண மழை! இந்த காரியத்தை செய்தவர்களுக்கு இத்தன லட்ச ரூபாய் அபராதமா? போலீஸ் அதிரடி!
சமூக வலை தளங்கள் (Social Media) தற்போது நமது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அங்கமாக மாறி விட்டன. சமூக வலை தளங்களை நிறைய பேர் தங்களது முழு நேர வேலைவாய்ப்பிற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக கணிசமான அளவில் அவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.
மறுபக்கம் வெறுமனே புகழுக்காகவும், பணத்திற்காகவும் சமூக வலை தளங்களில் வைரல் வீடியோக்களை (Viral Videos) வெளியிடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதில் ஒரு சில விஷயங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் நொய்டா (Noida) நகரில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள், சில கார்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அவர்கள் கார்களில் இருந்து ரூபாய் நோட்டுக்களை வீசி எறிந்ததுதான் சர்ச்சைகளுக்கு காரணம். இந்த ஊர்வலத்தில் குறைந்தபட்சம் 5 கார்கள் பங்கெடுத்துள்ளன. அவை எஸ்யூவி (SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் ஆகும்.
இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்த கார்களில், எந்த காரில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் வீசி எறியப்பட்டன? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் 20 ரூபாய் நோட்டுக்களை வீசி எறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, நொய்டா காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வைரல் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, விதிமுறைகளை மீறியவர்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற 5 கார்களுக்கும் காவல் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 3.96 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அபராதம் மற்றும் கார்கள் பறிமுதல் தொடர்பாக எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கைகள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கார்களின் ஜன்னல்கள் மற்றும் சன்ரூஃப் வழியாக வெளியே தொங்கி கொண்டு பயணம் செய்துள்ளனர். இது அவர்களுக்கு மட்டும் ஆபத்தானது அல்ல. இது போன்ற செயல்கள், சாலைகளில் பயணம் செய்யும் அனைத்து நபர்களுக்கும் ஆபத்தானது.
எனவே இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் காவல் துறையினரின் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடலாம். அதையும் மீறி இது போன்ற செயல்கள், சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு நபர், காரின் மேலே நின்று கொண்டு பணத்தை வீசி எறிந்து சென்றார். இது போன்ற நிகழ்வுகள் மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








