லம்போர்கினி, ஃபெராரினு எல்லாரும் வாங்கும்போது வித்தியாசமா யோசித்த பாடகர்! ஷோரூமில் மாஸ் பண்ணிட்டாங்க!
பிரபல மராத்தி பாடகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் அவதூத் குப்தே (Avadhoot Gupte), புதிதாக எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார், எம்ஜி பிராண்டின் பிரீமியம் விற்பனை நிலையமான எம்ஜி செலக்ட் (MG Select) டீலர்ஷிப் மூலம் குப்தே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆடம்பரமான முறையில் டெலிவிரி (Delivery) செய்யப்பட்டு உள்ளது.
தான் புதிய கார்களை வாங்கிய அனுபவங்களில் இதுவே சிறந்த ஒன்று என அவதூத் குப்தே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாடகர் அவதூத் குப்தேவின் எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் டெலிவரி ஆனது மும்பையில் எம்ஜி செலக்ட் டீலர்ஷிப் ஷோரூமில் (Dealership Showroom) நடைபெற்றுள்ளது.

கருப்புத் துணியால் மூடப்பட்டு இருந்த அவதூத் குப்தேவின் சைபர்ஸ்டர் கார் டெலிவரியை இன்னும் சிறப்பாக்க, பாரம்பரிய உடையில் இரண்டு மராத்தி ட்ரம்பெட் (Trumpet) இசைக் கலைஞர்களையும் டீலர்ஷிப் ஏற்பாடு செய்திருந்தது. மும்பையின் வோர்லி பகுதயில் அமைந்துள்ள எம்ஜி செலக்ட் ஷோரூமுக்கு பாடகர் அவதூத் குப்தே தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வந்தார்.
அப்போது, ட்ரம்பெட் இசைக்கலைஞர்கள் ஷோரூமுக்குள் நின்று வரவேற்க, குப்தே குடும்பத்தினருக்கு நெற்றியில் திலகம் இடப்பட்டது. உள்ளே நுழைந்ததும், ஷோரூமுக்குள் டீலர்ஷிப் அதிகாரிகள் வைத்திருந்த தனது போஸ்டர்களை குப்தே பார்வையிட்டார். பின்னர், அவருக்கு பாரம்பரிய மராத்தி தலைப்பாகையான 'பேட்டா' (Pheta) அணிவிக்கப்பட்டது. இது பொதுவாக திருமணங்கள் மற்றும் கலாச்சார விழாக்களில் அணியப்படும் ஒன்றாகும்.

இதன் பிறகு, பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு குப்தேவின் பெயர் பொறிக்கப்பட்ட கிளாப்பர்போர்டு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எம்ஜி சைபர்ஸ்டர் காரின் கவர் அகற்றப்பட்டது, குப்தே தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்காரை ஆர்வத்துடன் ஆய்வு செய்யத் தொடங்கினார். அவருக்கு பூங்கொத்து வழங்கப்பட்டது.
பின்னர், அவர் இந்து சடங்குகளைச் செய்து, தனது குடும்பத்துடன் கேக் வெட்டி, தனது மனைவியுடன் காரில் அமர்ந்தார். இது தனது 20வது அல்லது 21வது கார் என்றும், இதற்கு முன்பு இதுபோன்ற சிறந்த கார் டெலிவரியை தான் பார்த்ததில்லை என்றும் மகிழ்ச்சியுடன் அவதூத் குப்தே ஷோரூம் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் கார், இந்திய பாரம்பரியத்துடன் டெலிவரி செய்யப்பட்டது உண்மையிலேயே தனித்துவமானது என்றும் அவர் கூறினார். எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனம் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்காரை இந்த 2025ஆம் ஆண்டு ஜூலையில் ரூ.74.99 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியது.
இது 77 kWh பேட்டரி மற்றும் இரட்டை மோட்டார் அமைப்புடன் வருகிறது. இந்த பவர்டிரெயின் செட்-அப் அதிகபட்சமாக 510 bhp சக்தியையும், 725 Nm டார்க்கையும் வெளியிடுகிறது. மேலும், மணிக்கு 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டும். இதன் இரட்டை மோட்டார் அமைப்பு, AWD சிஸ்டத்தை வழங்குகிறது.

இந்த காரின் வெளிப்புறத்தில் LED ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியான சைடு ஸ்கர்ட்கள், தனித்துவமான பின்பக்க வடிவமைப்பு மற்றும் அம்பு வடிவ இணைக்கப்பட்ட LED டெய்ல் லேம்ப்கள் உள்ளன. கூடுதலாக, மின்சார ஸ்கிஸர் கதவுகள், ஸ்ப்ளிட் டிஃப்யூசர், 20 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் நேர்த்தியான உடல் வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.
உட்புறத்தில், ஒருங்கிணைந்த கண்ட்ரோல்கள் உடன் கூடிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் சக்கரம், இரண்டு 7-இன்ச் துணை டிஸ்ப்ளேக்கள், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் செங்குத்தாக அமைக்கப்பட்ட 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவை உள்ளன. இதில் டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் IRVM, வயர்லெஸ் சார்ஜிங், பல வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேட்டட் மற்றும் பவர்டு இருக்கைகள் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் (BOSE) ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி சைபர்ஸ்டர் ஆனது ஒரு கன்வெர்டபிள் கார் ஆகும். அதாவது, இதன் மேற்கூரையை தேவைக்கேற்ப திறந்து மூடிக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறான காரை வாங்க விரும்புவோரில் பெரும்பாலானோரின் சாய்ஸ் ஃபெராரி (Ferrari) அல்லது லம்போர்கினி (Lamborghini) கார்களாகவே இருப்பது வழக்கம். ஆனால், மராத்தி பாடகரும், நடிகருமான அவதூத் குப்தே வித்தியாசமாக யோசித்து மார்க்கெட்டில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த சைபர்ஸ்டர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications









