மாருதி கார்கள் எல்லாம் டப்பா கார்கள் என்று இனி ஒருத்தராலும் சொல்ல முடியாது! இந்த ஒரு சம்பவமே போதும்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சிஎன்ஜி (CNG) கார்கள் விற்பனையில் மிகுந்த ஈடுப்பாடு உடன் உள்ளது. இதனாலேயே சமீப காலமாக மாருதி சுஸுகியில் இருந்து புது, புது சிஎன்ஜி கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்னர் மாருதி சுஸுகி அறிமுகம் செய்த சிஎன்ஜி கார், பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG) ஆகும். பிரெஸ்ஸா சிஎன்ஜி கார்களை தொடர்ச்சியாக மக்கள் அதிகம் பேர் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்தாலே சாலை விபத்துகள் குறித்த ஒரு செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளுள் முக்கியமானவை மட்டுமே செய்திக்களில் இடம்பெறுகின்றன.

மற்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகின்றன. தற்போது நடந்துள்ள பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் விபத்தும் கூட இணையத்தில் கவனத்தை பெற்றிருப்பதற்கு காரணம், விபத்திற்குள்ளான பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் தலைக்கீழாக கவிழ்ந்து, கரப்பான் பூச்சி போல் சாலையில் கிடந்துள்ளது. இதைவிட இந்த பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் விபத்தில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது.
அதுதான், விபத்தில் காருக்குள் இருந்தவர்களின் நிலை ஆகும். இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்ட போதிலும் விபத்திற்கு பின் காருக்குள் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் தனது வலிமையான உடல் மூலமாக உள்ளே இருந்த பயணிகள் அனைவரது உயிரையும் காப்பாற்றி உள்ளது.

இத்தனைக்கும், குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் 5க்கு 4 நட்சத்திரங்களை மட்டுமே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது. பொதுவாகவே, மாருதி சுஸுகி கார்கள் நன்கு உடல் வலிமை உடன் இருப்பதில்லை என்கிற கருத்து நம் மக்களிடையே உள்ளது. அதனை பொய்யாக்கிய மாருதி கார்களுள் பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.
நிஜ வாழ்க்கையில், பிரெஸ்ஸா காரின் உடல் வலிமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ள இந்த விபத்து தொடர்பான வீடியோவின் மூலம் இந்த விபத்தில் எவரொருவருக்கும் காயமில்லை என்பதை அறிய முடிகிறது. மற்றப்படி, இந்த விபத்து எங்கு நடந்துள்ளது என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. விபத்திற்குள்ளான பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கும்போது, இந்த விபத்து தலைநகர் டெல்லிக்கு அருகே நடந்திருக்கலாம்.

அதேபோல், இந்த விபத்து எதனால் நடந்தது என்பது குறித்த விபரங்களும் இல்லை. காரின் முன்பக்கத்தில் பெரியதாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்பதால், இந்த பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் வேறெந்த வாகனத்துடனும் நேரெதிராக மோதவில்லை என்பதை அறிய முடிகிறது. காரின் பக்கவாட்டில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிவதால், வேறு எதாவது வாகனம் இந்த பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் பின்பக்கத்தில் மோதியிருக்கலாம் என யூகிக்கிறோம்.
பின்னால் மோதிய வாகனம் அதிவேகமாக வந்து மோதியதால், இந்த பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் குப்புற கவிழ்ந்து இருக்கலாம். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் முன்பக்க பொனெட் மற்றும் ரூஃப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. காரின் பின் சக்கரங்கள் அவற்றின் அச்சில் இருந்து விலகி உள்ளதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் பின் சக்கரங்களின் அச்சு பலத்த சேமடைந்து இருப்பதில் இருந்து இந்த விபத்து கோரமாகவும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதி வேகமாகவும் நடந்து முடிந்து இருப்பதை அறிய முடிகிறது. அப்படியிருந்தும், பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் உள்ளே இருந்த அனைத்து பயணிகளையும் காப்பாற்றி இருப்பது அதன் உடல் தரத்தை வெளிக்காட்ட கூடியதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









