சைஸில் வேணும்னா சின்னதா இருக்கலாம்... மாருதியோட புராடெக்ட் எப்படி!! டன் கணக்கில் எடை கொண்ட டிஃபெண்டர் கார்
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), ஓர் அளவில் பெரிய பிரம்மாண்ட வாகனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வாகனத்திற்கு உதவி தேவை என்றவுடன், மாருதி சுஸுகியின் ஜிம்னி வாகனம் மீட்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், ஜிம்னி வாகனம் தனக்கு வழங்கப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடித்துக் கொடுத்துள்ளது.
'உண்மையான நண்பன் ஆபத்து காலத்தில் தெரிவான்' என்பதை போல், எந்தவொரு ஆட்டோமொபைல் வாகனத்தின் திறனும் கரடு, முரடான ஆஃப்-ரோடு பயணங்களின் போதுதான் தெரியும். இருப்பினும், அதனையும் தாண்டி வேறு சில பிரச்சனைகளினால் மிக பெரிய ஆஃப்-ரோடு வாகனங்கள் கூட சில சமயங்களில் நடுவழியில் பாதியில் நிற்பது உண்டு.

ஆஃப்-ரோட்டில் வாகனம் ஓட்டுவதற்கு ஓர் அசாத்தியமான டிரைவிங் திறன் வேண்டும். அது இல்லையென்றால், எவ்வளவு பெரிய & திறன்மிக்க வாகனத்தை கொடுத்தாலும் வீண். இதற்கு சரியான உதாரணாக தற்போது ஒரு சம்பவம் ஜம்மூ காஷ்மீரில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து சிலர் ஜம்மூ காஷ்மீருக்கு தங்களது விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் சென்றுள்ளனர்.
ஜம்மூ காஷ்மீரில் பனி நிறைந்த சாலையில் தங்களுக்கு உருவாக்கிக் கொடுத்த பாதையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டரை டிரைவர் மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் பாதையில் இருந்து டிஃபெண்டர் கார் விலகியது. இதனால், பனி குவியலுக்குள் காரின் சக்கரங்கள் சிக்கின. டிஃபெண்டர் கார் டிரைவருக்கு இவ்வாறான பனி பாதையில் வாகனம் ஓட்டிய அனுபவம் இல்லை போல.
ஏனெனில், பனி பாதையில் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள், இவ்வாறான சூழலில் சிக்கிக் கொண்டால் வேறு திசைக்கு திருப்பி வாகனத்தை மீட்டுவிடுவர். ஆனால், இந்த டிஃபெண்டர் கார் டிரைவரிடம் அந்த அளவிற்கு அனுபவம் இல்லை. இதனால், பனியில் இருந்து மீட்கிறேன் என்ற பெயரில் கொஞ்சம் ஓவராக இவர் முயற்சித்ததால் டிஃபெண்டர் காரின் டயர்கள் மேலும் ஆழமாக பனியில் புதைந்தன.
அதேபோல், டிஃபெண்டர் காருக்கு பின்னால் வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரும் பனியில் சிக்கியது. இவ்வாறு நிலைமை மேலும் மேலும் மோசமாகியதால், வேறு வழியின்றி உதவிக்கு ஆளை அழைக்கும் நிலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தள்ளப்பட்டனர். இதன்படி, உதவிக்கு மாருதி சுஸுகி ஜிம்னியில் ஆட்கள் வந்தனர். டிஃபெண்டர் மற்றும் ஸ்கார்பியோ என இரண்டை காட்டிலும் ஜிம்னி அளவில் சிறியது.

இருப்பினும், 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருந்ததாலும், டிரைவர் இவ்வாறான சூழல்களில் ஓட்டி நன்கு அனுபவமிக்கவர் என்பதாலும், டிஃபெண்டர் மற்றும் ஸ்கார்பியோ என இரு கார்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஜிம்னி மூலம் மீட்க முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஜிம்னி வாகனத்தில், பனியில் டிரைவ் செய்வதற்கு ஏற்ற டயர்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பனி பாதையில் செல்லும்போது வாகனத்தின் டயர்கள் வழுக்குவது சாதாரணமான ஒன்றுதான். இதன் காரணமாகவே, துருவ பகுதிகளில் உள்ள வெளிநாடுகளில் பனிகால டயர்கள் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நாம் பார்த்துள்ள சம்பவத்திலும், பிரத்யேகமான டயர்கள் இருந்த காரணத்தினாலேயே ஜிம்னி வாகனம் மூலமாக மற்ற இரு வாகனங்களை மீட்க முடிந்தது.


Click it and Unblock the Notifications








