இத மாருதி தயாரிச்ச காருனு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க.. அந்த ஹோட்டலுக்கு போறவங்க குடுத்து வச்சவங்க!!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)-வும் ஒன்றாகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காருக்கு, அதன் குட்டியான உருவ தோற்றத்தின் காரணமாகவும், மலிவு விலை காரணமாகவும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய காரையே பக்கி (Buggy) வாகனமாக மாற்றி இருக்கின்றனர். ஓர் ஹோட்டலுக்காகவே இவ்வாறு அக்கார் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வு இந்தியாவில் அரங்கேறவில்லை.
இளைஞர்கள் அதிகம் செல்லத் துடிக்கும் இந்தோனேசியாவின் பாலி-யில் உள்ள ஓர் ஹோட்டலிலேயே இந்த கார் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. தங்களுடைய விருந்தினர்கள் சுற்றுலா செல்லும் போது தடையின்றி தளங்களை பார்வையிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திலேயே இவ்வாறு மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் மாற்றப்பட்டு இருக்கின்றது.

Source: Facebook இந்தியாவில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ரூ. 4.26 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய குறைவான விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலேயே மிகவும் துணிச்சலாக அந்த காரை பக்கி வாகனமாக மாற்றியிருக்கின்றனர்.
அதுமட்டுமில்லைங்க, இது அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், பயணத்தினால் மட்டுமல்ல இந்த கார் வாயிலாகவும் விருந்தினர்கள் கவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரை பக்கி வாகனமாக மாற்ற அதன் நான்கு டோர்களையும் முழுமையாக அகற்றி இருக்கின்றனர். இதுதவிர, மேற்கூரையையும் அவர்கள் அகற்றி இருக்கின்றனர்.

தொடர்ந்து, புதிதாக ஃப்ளாட்டான மேற்கூரையையும், காரின் பிள்ளர்களுக்கு இரும்பு குழாய்களையும் புதிதாக நிறுவியிருக்கின்றனர். தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பிற்கு பக்கவாட்டில் ஸ்டீல் கை பிடிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மழை காலத்திற்காக பக்கவாட்டில் திரைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக பயணிகள் நனைவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.
இந்த மாதிரியான மாற்றங்கள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.எஸ்-பிரஸ்ஸோ காரில் கே சீரிஸ் 1.0 லிட்டர், ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பமும் இந்த மோட்டாரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுவே அதிக மைலேஜை வழங்கக் கூடியதாக எஸ்-பிரஸ்ஸோ மாற்றி இருக்கின்றது. இந்த மோட்டார் 65.7 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி (ஏஜிஎஸ்) கியர்பாக்ஸ் தேர்வுகளே இந்த மோட்டாரில் வழங்கப்படுகின்றது.
இந்த காரில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமல்ல சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் சிஎன்ஜி ஆப்ஷனே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 32.73 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், இதன் பெட்ரோல் ஆப்ஷனும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவே இருக்கின்றது. அது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கே 25.30 கிமீ வரை மைலேஜ் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இதுபோன்று வாகனங்கள் மாடிஃபைடு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், கடந்த காலத்தில் டாடா நானோ கார் ஹெலிகாப்டர் காராக மற்றப்பட்ட சம்பவம் கூட இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இதுமட்டுமல்ல மூன்று சக்கர ஆட்டோவை அடுக்குமாடி வீடு போல தயார் செய்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. இந்த நிலையிலேயே எஸ்-பிரஸ்ஸோ பக்கி வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









