மாருதி ஆல்டோ கார் ஓனர்ஸ் கெத்தா காலரை தூக்கி விடலாம்! இந்த காருக்கு கஸ்டமர்ஸ் ஏன் குவியுறாங்கனு இப்போ புரியுது
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் பலருக்கு நன்கு தெரிந்த கார்களுள் '800' ஒன்றாகும். 1990களில் லட்சக்கணக்கான மக்களால் அதிகம் வாங்கப்பட்ட மாருதி 800 கார் தான் அதன்பின் ஆல்டோ (Alto) காராக மாறியது எல்லாம் தனி கதை. மாருதி 800 காரை போல, மாருதி ஆல்டோ காரின் பெயரும் நாடு முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு சிலர் 'லார்ட் ஆல்டோ', அதாவது கடவுள் ஆல்டோ என கடவுளுக்கு இணையாக வைத்து ஆல்டோ காரை அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சிறப்பான மைலேஜை வழங்குவது மட்டுமில்லாமல், குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக்கூடிய காராக ஆல்டோ விளங்குகிறது.
ஆல்டோ காரின் சிறப்புகளை சொல்வதாக இருந்தால் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இதுவரையில் நாம் பார்க்காத ஒரு ஆச்சிரியமான சம்பவம் பழைய ஜென்ரேஷன் மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரில் நடந்துள்ளது. அது என்னவென்றால், மனிதனின் இடுப்பளவு ஆழம் கொண்ட நீரில் ஆல்டோ காரை அசால்ட்டாக ஓட்டி சென்றுள்ளனர். காரும் இடையில் எங்கேயும் நிற்காமல் மறுப்பக்க கரையை அடைந்துள்ளது.

பொதுவாக, நீரில் இயங்குவதில் ஒவ்வொரு காரும் ஒவ்வொரு விதமான திறன் உடன் இருக்கும். அதாவது, ஒரு சில வாகனங்கள் 6 அடி ஆழமுள்ள நீரிலும் இயங்கக் கூடியவைகளாக இருக்கும். இத்தகைய வாகனங்கள் பெரும்பாலும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (SUV) வாகனங்களாக இருக்கும். இந்த வாகனங்களை கரடு முரடான காட்டு வழிப்பாதைகளில் கொண்டு செல்வதற்கு அதிகமாக பயன்படுத்துவர். ஆனால், 6 அடி ஆழமுள்ள நீரில் பெரும்பாலான சாதாரண கார்கள் மூழ்கிவிடும்.
காரின் உயரம் மிகவும் குறைவாக இருந்தால், அதற்கேற்ற ஆழ நீரில் மட்டுமே அத்தகைய கார்களால் இயங்க முடியும். மாருதி சுஸுகி ஆல்டோவும் உயரம் குறைவான காரே ஆகும். ஆதலால், ஆல்டோ காரில் அதிக ஆழமுள்ள நீரில் இயங்க முடியாது என கூறப்பட்டு வரும் நிலையில், அதை அனைத்தையும் உடைத்தெறியும் விதமாக, இடுப்பளவு ஆழம் கொண்ட நீரில் ஆல்டோ காரை ஓட்டி அசத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தது இந்திய வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆகும். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பிரம்மப்புத்திரா போன்ற பெரிய ஆறுகள் கரைப்புரண்டு ஓடுவதால், அசாமில் பல முக்கியமான சாலைகள் கூட மழைநீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, தாழ்வான சாலைகள் மற்றும் சுரங்கச்சாலைகளில் மழைநீர் அதிகம் தேங்கி உள்ளது.
அவ்வாறான தாழ்வான சாலை ஒன்றில்தான் இந்த மாருதி ஆல்டோ 800 காரை ஓட்டி அசத்தி உள்ளனர். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இடுப்பளவு தேங்கிய மழைநீரில் இடையில் எங்கேயும் நிற்காமல் கிரே நிறத்திலான மாருதி ஆல்டோ 800 காரை ஓட்டிக் கொண்டு வருவதை காணலாம்.

இதில் ஒரு கட்டத்தில், காரின் முன்பக்க கிரில் பகுதி முழுவதையும் மழைநீர் மூழ்கடித்துள்ளது. இருப்பினும், கார் எங்கேயும் நிற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், நீரில் இருந்து சீக்கிரமாக வெளியேற வேண்டும் என்பதற்காக, எந்த இடத்திலும் காரின் வேகத்தை டிரைவர் அதிகரிக்கவில்லை. கரையின் மீது கார் ஏறியவுடன் காரின் அடிப்பகுதியில் இருந்து சாரை சாரையாக நீர் கொட்டுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்ளே புகுந்த மழைநீர் அனைத்தும் வெளியேறிய பின், காரின் எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து எப்போதும் போல் புகை வெளிவருவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இது, மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரின் தரத்தை காட்டுகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தால் நிச்சயமாக காரில் ஏதேனும் சிறு பிரச்சனை ஆவது ஏற்பட்டிருக்கும். ஆதலால், முடிந்தவரையில் இவ்வாறான செயல்களை தவிர்ப்பது நல்லது.
Source: autojournal_india/ instagram (https://www.instagram.com/autojournal_india/)


Click it and Unblock the Notifications









