மாருதி ஆல்டோ கார்களை இதனால்தான் மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க!! 20 வருஷமானாலும் அப்படியே இருக்கு...
மாருதி ஆல்டோ (Maruti Alto) காரின் மேற்கூரையில் அதனை காட்டிலும் அளவில் பெரிய ஷிப்பிங் கண்டெயினர் (Shipping Container) கயிற்றில் கட்டி சாலையில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பார்ப்போரை மிரள வைக்கும் இந்த நிகழ்வு குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோவிற்கு அறிமுகமே தேவையிருக்காது என நினைக்கிறேன். மக்கள் மத்தியில் இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி நன்கு பிரபலமானதற்கு காரணமாக விளங்கும் தயாரிப்பு வாகனங்களுள் ஒன்று. தற்போது வரையில், பல மாடர்ன் கார்களுக்கு மத்தியில் இந்தியாவின் சிறந்த விற்பனை காராக ஆல்டோ விளங்கி வருகிறது.

ஆனால் தற்சமயம் 1 லிட்டர் என்ஜின் மட்டுமே ஆல்டோ விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆல்டோவின் அடையாளமே அதன் பிரபலமான 800சிசி தான். அதனாலேயே ஆல்டோ 800 என அழைக்கப்பட்டு வந்தது. ஆல்டோ 800 காரின் விற்பனையை சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. அளவில் சிறிய 800சிசி என்ஜின் உடன் சிறந்த மைலேஜ் கார் என்பது ஒருபக்கம் இருக்க, ஆல்டோவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் அதிக ஆயுட்காலம் ஆகும்.
ஆல்டோ காரை 10, 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருபவர்களை பரவலாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு தரமான கட்டமைப்பில் ஆல்டோ கார்கள் உருவாக்கப்பட்டன, தற்போதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு மற்றொரு சாட்சியாகவே சமீபத்தில் பொது சாலையில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. "கடவுள் ஆல்டோ" என்ற பெயரில் புகழப்படும் இந்த குறிப்பிட்ட ஆல்டோ கார் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்பது அதன் தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது.
கப்பல்களிலும், பெரிய கனரக லாரிகளிலும் எடுத்து செல்லப்படும் கண்டெயினரை இந்த ஆல்டோ காரின் மேற்கூரையில் வைத்து கயிற்றால் கட்டி எடுத்து சென்றுள்ளனர். கண்டெயினருக்குள் என்ன உள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும், முழுக்க முழுக்க வலிமையான இரும்பினால் உருவாக்கப்படுவதால் காலி கண்டெயினரும் எடைமிக்கதாகவே இருக்கும். இருந்தாலும், இந்த ஆல்டோ ஹேட்ச்பேக் கார் இந்த கடினமான சுமையையும் இலாவகமாக சுமந்து செல்கிறது.
எந்தவொரு காரின் மீதும் கண்டெயினரை வைத்து எடுத்து செல்வது ஆபத்தானது என்பதால், காருக்கு கூடவே இருவர் மோட்டார்சைக்கிளில் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவை காட்சிப்படுத்தியவர்களும், கண்டெயினரை சுமந்து செல்லும் ஆல்டோ காருக்கு பாதுகாப்பாக சென்றவர்கள் என்றே நினைக்கிறோம். மேலும், இந்த கடினமான வேலையை செய்யும் ஆல்டோ காரையும் மெதுவாகவே இயக்கி சென்றுள்ளனர்.
இதனால் கார் சாலையின் ஓரத்திலேயே இயக்கி செல்லப்பட்டுள்ளது. வீடியோவில் காரை சற்று உற்று பார்த்தீர்கள் எனில், காருக்கு ஏடாக்கூடமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை காணலாம். இதனால் இந்த குறிப்பிட்ட ஆல்டோ கார் ஏதேனும் தொழிற்சாலையிலோ அல்லது மெக்கானிக் ஷாப்பிலோ இவ்வாறான கடினமான வேலைகளை செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கலாம். காரின் நம்பர் பிளேட்டையும், அருகே செல்லும் பைக்கின் நம்பர் பிளேட்டையும் தெளிவாக காண முடியாததால் இந்த சம்பவம் எங்கு நடைப்பெற்றுள்ளது என்பதை அறிய முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த நிகழ்வு, முழுக்க முழுக்க மாருதி சுஸுகியின் தயாரிப்பு தரத்தையும், ஆல்டோ கார்களின் உழைப்பு தன்மையுமே வெளிக்காட்டுகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் இவ்வாறான செயல்கள் பொது சாலையில் ஆபத்தானவை. நல்ல வேளையாக, பாதுகாப்பிற்காக மோட்டார்சைக்கிளிலும், காரிலும் உடன் ஆட்கள் சென்றுள்ளனர். இருப்பினும், இதற்கு போலீஸாரிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications








