விளையாட்டு விபரீதமான சம்பவம்: கடல் அலைகளில் சிக்கிய மாருதி எர்டிகா கார்... அதிர்ச்சி வீடியோ...!
கார் ஒன்று கடல் அலையில் சிக்கி தவிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர், தங்களின் வாகனத்தின் மூலம் சாகசத்தை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு சாகசத்தை மேற்கொள்ளும்போது, அதற்கேற்ப வகையில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்து இயக்கவில்லை என்றால் பல்வேறு பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும்.

அதுபோன்ற ஓர் சம்பவம் தான், இந்தியாவின் நிதி நிறுவனங்களின் தலைநகரான மும்பைக்கு அருகே உள்ள பல்ஹர் பகுதியில் அரங்கேறியுள்ளது. மும்பையிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பல்ஹர் பகுதி.இங்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீடியோவில், வெள்ளை நிற மாருதி சுஸுகி எர்டிகா கார், கடலில் சிக்கியிருப்பதைப்போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், கார் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்வதைப்போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

தொடர் அலையில் சிக்கியதால், அந்த கார் கடலை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வந்தது. அப்போது, அங்கிருந்த சிலர் டிராக்டர் உதவியால், மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி ரக காரை வெளியேற்றினர்.
இந்த காரை அதன் உரிமையாளர், கடற்கரையில் வைத்து இயக்கி, சாகசம் செய்தபோது இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

அவ்வாறு, அவர் அலைகளைக் கிழித்தவாறு, காரை ஓட்டி வந்தபோது, கவனக்குறைவினால், அளவுக்கதிகமாக கடலுக்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது, தொடர் அலைகளில் எர்டிகா கார் சிக்கியுள்ளது. பின்னர், அதன் உரிமையாளர், காரை கரைக்கு எடுத்து வர முயற்சித்துள்ளார்.
ஆனால், அதிகப்படியான அலைகளால், கார் உள் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கூடியிருந்த சிலர், டிராக்டரின் உதவியால், கயிறு கட்டி எர்டிகா காரை, உரிய நேரத்தில் வெளியேற்றினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த எம்பிவி ரக எர்டிகா கார், ஆஃப் ரோட் பயணத்திற்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படவில்லை. இதனை, சாலை பயன்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், சிறிதளவு கூட, இந்த காரில் ஆஃப் ரோடு பயணத்திற்குன்டான வசதிகள் இடம்பெறவில்லை. இதன்காரணமாகவே, இந்த ஆபத்தான சூழ்நிலையை எர்டிகா கார் சந்தித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின், இந்த எம்பிவி ரக காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த காரின் இரண்டாம் தலைமுறை மாடலை, அந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிலையில், எர்டிகா காரின் சொகுசு மாடலையும் அந்த நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது, 6 சீட்டர் மாடலாக களமிறங்க இருக்கின்றது. அந்தவகையில், இந்த காரின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் அதன் ஸ்பை படங்கள் வெளியாகின. ஆகையால், இந்த கார் நடப்பாண்டின் தீபாவளிக்கு முன்னரே களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications