1 வருடத்தில் 80 ஆயிரம் கிமீ-க்கு ஓட்டியவர் காரை பற்றி சொன்ன அந்த ஒரு வார்த்தை! வாங்கும்போது மட்டும்தான் செலவு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் சமீபத்திய தரமான கார்களுள் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை சொல்லலாம். கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் விட்டாராவை ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கிலானோர் வாங்குகின்றனர். அவ்வாறு இந்த மாடர்ன் மாருதி காரை வாங்கிய நபர் ஒருவர் அதனை கிட்டத்தட்ட 80 ஆயிரம் கிமீ தொலைவிற்கு ஓட்டிய பின்பு காரை பற்றிய தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். கார் அறிமுகம் செய்யப்பட்ட உடன் கிடைக்கும் ரிவியூவை விட, இவ்வாறு நீண்ட நாட்கள் ஓட்டிய ஓனரின் ரிவியூ சுவாரஸ்யமானதாக இருக்கும். வாருங்கள் பார்ப்போம்.
மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு சமயத்தில் விட்டாரா பிரெஸ்ஸா என்கிற சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்துக் கொண்டிருந்தது. பின்னர் அந்த காரின் பெயர் பிரெஸ்ஸா என சுருக்கப்பட்டு, காரின் தோற்றமும் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு காரணம், விட்டாரா பெயரில் இன்னொரு புதிய காரை அறிமுகம் செய்யும் திட்டம் மாருதி சுஸுகியிடம் இருந்ததினால்.

அதன்படி, சரியாக 3 மாதத்தில் 2022 செப்டம்பரில் கிராண்ட் விட்டாரா காரை மாருதி சுஸுகி இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. பிரெஸ்ஸா காரை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கூடுதல் விலையுடனும் இருந்ததினால் விட்டாரா பெயருடன் 'கிராண்ட்' இணைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் பவர்ஃபுல்லான மாருதி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு கிராண்ட் விட்டாரா ஏற்றதாக உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கார் ஹைப்ரீட் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
அதாவது, கிராண்ட் விட்டாரா ஹைப்ரீட் காரை பெட்ரோலிலும், சில கிமீ தொலைவிற்கு வெறும் எலக்ட்ரிக்கிலும் ஓட்டிச் செல்லலாம். சிஎன்ஜி ஆப்ஷனில் கூட இந்த கார் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹூண்டாய் கிரெட்டா என்கிற பிரபலமான காருக்கு போட்டியாக விளங்குவதால், உண்மையில் மற்ற மாருதி கார்கள் அளவிற்கு கிராண்ட் விட்டாரா விற்பனையாகுவதில்லை. இருப்பினும், கடந்த 2 வருடங்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனையாகி விட்டன.

அவர்களுள் ஒருவராக கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த காரை வாங்கியவர் அருண் பன்வர் (Arun Panwar). ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவரான இவர், டெலிவிரி எடுத்ததில் இருந்து கடந்த 1 வருடத்தில் சுமார் 80 ஆயிரம் கிமீ தொலைவிற்கு காரை ஓட்டியுள்ளார். அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 200கிமீ தொலைவிற்கு ஓட்டுகிறார். இருப்பினும், தனக்கு பெரியதாக எந்த பராமரிப்பு செலவும் வரவில்லை என கூறும் அருண் பன்வர், காரின் டயர்கள் மற்றும் பிரேக் பேட்களை கூட மாற்றவில்லையாம்.
எந்தவொரு காரிலும் பெரும்பாலும் முதலில் சேதமடைவது டயர்கள் அல்லது பிரேக் பேட்கள் தான். ஆதலால், அருண் பன்வரின் கிராண்ட் விட்டாரா கார் தரமானதாக உழைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் சாட்சியாக சர்வீஸ் ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்கும் இந்த நபர், வழக்கமான பழுதுப்பார்ப்புக்கு ரூ.7,000- 8,000 வரையில் செலவு செய்தால் போதும் என்கிற நிலை இருப்பதாக தெரிவிக்கிறார்.

இதை விட அருண் பன்வர் கூறும் இன்னொரு ஷாக்கிங்கான விஷயம் என்னவென்றால், இதுவரை இவர், கார் வாங்கிய ஷோரூமுக்கு செல்லவே இல்லையாம். ஷோரூம் கீழ் இயங்கும் சர்வீஸ் செண்டர் ஆட்கள் அவர்களாக வீட்டிற்கு வந்து காரை எடுத்துக் கொண்டு சென்று பழுதுகள் ஏதேனும் உள்ளனவா என ஆராய்ந்து பார்த்துவிட்டு, சிறு சிறு பழுதுகள் இருந்தால் அதனை சரி செய்து அவர்களாகவே வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்தி விடுவார்களாம்.
மாருதி சுஸுகி இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக இருப்பது இதனால்தான். நாடு முழுவதும் எந்தவொரு மூலையில் இருக்கும் கஸ்டமரையும் எளிதாக & விரைவாக அணுகக்கூடிய வகையில் பெரிய சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை மாருதி சுஸுகி வைத்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் காருக்கான பாகங்கள் பற்றாக்குறை என்கிற பேச்சுக்கே இடமில்லை. இந்த கார்களை உற்பத்தி செய்ய பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி இத்தனை சிறப்புமிக்கதாக இருந்தாலும், அருண் பன்வர் கூறுவதை வைத்து அவரது கிராண்ட் விட்டாரா காருக்கு உறுதியளிக்க முடியாது. ஏனெனில், இந்த விபரங்கள் அனைத்தையும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை ஆதாரமாக வைத்தே கூறுகிறோம். அதுமட்டுமின்றி, அருண் பன்வரை போன்று எல்லா கிராண்ட் விட்டாரா கார் கஸ்டமர்களும் இந்த அனுபவத்தை பெற முடியும் என உறுதியாக கூற முடியாது. ஏனெனில், ஒவ்வொருவரும் வாழும் சூழல் மற்றும் டிரைவிங் ஸ்டைல் வேறு ஆகும்.


Click it and Unblock the Notifications









