லான்ச் ஆன சில நாட்களிலேயே யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு வந்த மாருதி தயாரிப்பு! உண்மையான காரணத்தை கேட்டதும் ஷாக்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது லைஃப்-ஸ்டைல் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூன் 7ம் தேதிதான், மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான (Variant) ஜெட்டா மேனுவல் வேரியண்ட்டின் விலை (Price) 12.74 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டான ஆல்பா ஆட்டோமேட்டிக் ட்யூயல்-டோன் வேரியண்ட்டின் விலை 15.05 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். சற்று விலை உயர்ந்த கார் என்றாலும் கூட, மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் பிரம்மாண்டமான வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இந்த காருக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்திருப்பதுதான் அதற்கு சாட்சி.
மாருதி சுஸுகி ஜிம்னி காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், அதற்குள்ளாக இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் (Second Hand) மார்க்கெட்டில், மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனைக்கு வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு யூஸ்டு கார் டீலர்ஷிப்பில் (Used Car Dealership), மாருதி சுஸுகி ஜிம்னி கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இது தொடர்பாக யூடியூப் (YouTube) தளத்தில், வீடியோ (Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுஸுகி ஜிம்னி காரை பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.
அத்துடன் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகிய 2 கார்களுக்கு இடையேயான ஒப்பீடும் (Comparison) இந்த வீடியோவில் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா தார்தான், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நேரடி போட்டி மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, மாருதி சுஸுகி ஜிம்னி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள கார். அப்படி இருக்கும்போது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அது எப்படி? செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிற்கு வரும் என நீங்கள் நினைக்கலாம். இதற்கு பின்னால் உள்ள வியாபார தந்திரத்தை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.
மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு தற்போதைய நிலையில் 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் (Waiting Period) உள்ளது. அப்படியானால் நீங்கள் இன்று முன்பதிவு செய்தால், 8 மாதங்களுக்கு பிறகுதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். இவ்வளவு காலம் பொறுமையாக காத்திருக்க ஒரு சிலருக்கு மனம் வராது.
உடனடியாக டெலிவரி கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள். அப்படிப்பட்ட நபர்களை குறி வைத்துதான், இந்த வியாபாரம் நடைபெறுகிறது. அதாவது அதிக டிமாண்ட் ஏற்படலாம் என கருதப்படும் கார்களை, தேவையே இல்லாத ஒருவர் முன்கூட்டியே முன்பதிவு செய்து, சொந்த பணத்தில் வாங்கி வைத்து கொள்வார்.
ஆனால் அந்த காரை பயன்படுத்துவது அவரது நோக்கமாக இருக்காது. டிமாண்ட் அதிகரித்து, காத்திருப்பு காலம் உயரும்போது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் காரை விற்பனை செய்ய அவர் முன்வருவார். ஆனால் ஷோரூம் விலையை காட்டிலும், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் அந்த காரின் விலை ஒரு சில லட்சங்கள் அதிகமாக இருக்கும்.
ஷோரூமில் இருந்து டெலிவரி கிடைக்கும் வரை காத்திருக்க முடியாது என்பவர்கள், அதிக விலை கொடுத்து அந்த காரை வாங்கி கொள்வார்கள். புதிய காருக்கு புதிய காரும் ஆகி விட்டது. காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் பணத்தை அதிகமாக செலவழிக்க வேண்டும். இதுபோன்ற நபர்களை இலக்காக வைத்துதான் இந்த வியாபாரம் நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காருக்கு டிமாண்ட் அதிகரித்தபோது கூட, ஒரு சிலர் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்று நல்ல லாபம் பார்த்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரியான காரை தேர்வு செய்து, வாங்கி விற்றால் கூட நல்ல லாபம் கிடைக்கும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனேகமாக இதுதான் இந்தியாவின் முதல் யூஸ்டு மாருதி சுஸுகி ஜிம்னி காராக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலை எவ்வளவு? என்பது வீடியோவில் கூறப்படவில்லை. ஆனால் வீடியோவிலேயே தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








