ஓட்டல்களுக்கு போய் காசை வீணாக்க தேவையில்ல!! இந்த மாருதி வாகனத்தை வீட்டிலேயே இப்படி மாற்றலாம்!!
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) உரிமையாளர் ஒருவர் தனது வாகனத்தில் படுக்கை வசதியை ஏற்படுத்தி பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளார். 5 கதவுகளை கொண்ட வாகனமாக இருப்பினும், நீளம் குறைவான ஜிம்னி வாகனத்தில் இவ்வாறு படுக்கையை பொருத்தி அசத்தியுள்ளார். யார் அந்த நபர்? எவ்வாறு இதனை சாத்தியமாக்கினார் என்பதை இனி பார்க்கலாம்.
வாகனத்தை எடுத்துக் கொண்டு அவ்வப்போது புதிய புதிய இடங்களுக்கு செல்வது நம் இந்தியர்களுக்கு எப்போதுமே பிடித்தமான விஷயம். இதற்கேற்ப நமது இந்தியாவும் அளவில் பெரியதாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோரிடம் பைக் அல்லது கார் உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

ஏனெனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பகுதிகளை பார்வையிட முடியாது. சொந்தமாக ஓர் வாகனம் இருந்தால் விரும்பிய இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம் என நினைப்பவர்களே அதிகம். ஒரு சிலர் இன்னும் அட்வான்ஸாக யோசித்து, ஓட்டல்களுக்கு ஆகும் செலவை கூட தவிர்க்கும் விதமாக தங்களது வாகனத்தையே முகாம் ஆக பயன்படுத்துக்கின்றனர்.
அவ்வாறு தனது மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தை படுக்கை வசதியுடன், தங்குவதற்கு கூடாரமாக மாற்றியுள்ள தம்பதியை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். டெல்லியை சேர்ந்த இந்த தம்பதி, தங்களின் ஜிம்னியில் படுக்கை வசதியை கொண்டுவர திட்டமிட்டு, பின் வரிசையில் இருந்த இருக்கைகளை கழற்ற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.

சாலையில் ஜிம்னியை நிறுத்தி இந்த வேலைகளை அவர்கள் செய்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, இந்த வேலையை அடுத்த நாள் பார்த்து கொள்ளலாம் என தீர்மானித்தனர். அடுத்த நாளில், முன்கூட்டியே திட்டமிட்டு ஜிம்னியை ஓர் மூடிய கட்டிடத்திற்குள் நிறுத்திவிட்டு, இருக்கைகளை கழற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். ஆனால் இம்முறை, அவர்களுக்கு வேறொரு யோசனை வருகிறது.
அதாவது, பின் வரிசையில் உள்ள இருக்கைகளை முழுவதுமாக நீக்க 4 போல்ட்களை கழற்ற வேண்டும். ஆனால், 2 போல்ட்களை கழற்றி, இருக்கைகளின் மேல் பாதியை முதலில் நீக்கிவிடுவோம் என இந்த தம்பதிக்கு தோன்றியுள்ளது. பின் இருக்கைகளின் மேல் பாதியை கழற்றிய பின்பு, கீழ் பாதியை கழற்றுவது அவ்வளவு சிரமமானதாக இருக்கவில்லை என இந்த தம்பதியினர் கூறுகின்றனர்.
ஆக, ஜிம்னியின் பின் வரிசையில் இருந்த இருக்கைகள் இரண்டும் கழற்றப்பட்டு விட்டன. பின்னர், சீட்பெல்ட்களுக்கான கொக்கிகளும் கழற்றப்பட்டன. இவையெல்லாம் நீக்கிய பின்னர், இருவர் படுப்பதற்கு போதுமான இடவசதி கிடைத்துள்ளது. இதன் பின்னர் படுக்கையை ஏற்படுத்துவது ஒன்றுதான் பாக்கி. படுக்கைக்காக இந்த தம்பதி என்ன செய்துள்ளார்கள் என்றால், முன் இருக்கைகள் இரண்டையும் முழுவதுமாக பின்னோக்கி சாய்த்துள்ளனர்.

ஜிம்னியில் இவ்வாறு முன் இருக்கைகளை 90 டிகிரிக்கு முழுவதுமாக சாய்க்க முடியும். இருப்பினும், இருவர் படுப்பதற்கு இரு இருக்கைகள் போதாது அல்லவா. தேவைப்பட்ட மீதி இடங்களுக்காக, வீட்டில் இருந்து 6 இன்ச்சில் சிங்கிள் படுக்கையை கொண்டுவந்து பொருத்தியுள்ளனர். இருப்பினும், ஆங்காங்கே இருந்த சிறு சிறு இடைவெளிகளை தலையணைகளை கொண்டு சரிச் செய்துள்ளனர்.
பின்னர் இறுதியாக, ஓர் போர்வையை கொண்டு அனைத்தையும் மூடி, படுக்கை போன்று கொண்டு வந்துள்ளனர். இந்த போர்வைக்கு கீழ் தான் முன் இருக்கைகளின் மேல் பாதியும் உள்ளது. ஆதலால், இந்த ஜிம்னியின் முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், வாகனத்திற்குள் எந்தவொரு இருக்கையும் இல்லாதது போல் தெரியும். தேவைப்படும் நேரத்தில், கதவுகளை திறக்காமலேயே முன் இருக்கைக்கு வந்து வாகனத்தை ஓட்ட முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சுற்றுலாக்கு செல்வோர் தங்களது கார்களை கூடாரம் போல் மாற்றிக் கொள்வதை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் அதனை காட்டிலும், இது எளிமையானதாகவும், கூடுதல் சவுகரியமானதாகவும் தெரிகிறது. இதற்கு நாம் ஜிம்னியை வடிவமைத்த மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications
