ராங் சைடுல வந்துட்டு காருக்கு வழி விட மறுத்த டாக்ஸி டிரைவர்! திடீர்னு நடந்த ட்விஸ்ட்டால் தலை தெறிக்க ஓடிட்டாரு
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents), ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்குவதும், ஒரு வகையில் முக்கியமான காரணமாக உள்ளது. ராங் சைடில் வாகனங்களை இயக்குவதால், சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு, கை கலப்பையும் உண்டாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் ராங் சைடில் பயணம் செய்ததால், வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வைரல் வீடியோவின் (Viral Video) மூலம், 2 கார்களின் டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை நமக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் கார் ஒன்று நேராக சென்று, வலது பக்கம் திரும்புவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது எதிரில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் ஒன்று வருவதை நீங்கள் காணலாம்.
இது டாக்ஸி ஆகும். அதன் டிரைவர் டாக்ஸியை ராங் சைடில் ஓட்டி வந்துள்ளார். இதன் காரணமாக நாங்கள் முதலில் குறிப்பிட்ட காரால் முன்னேறி செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் 2 கார்களும் ஒன்றை ஒன்றை நேருக்கு நேர் பார்த்தபடியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தன. இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க டாக்ஸி டிரைவர் மீதுதான் தவறு.

அவர்தான் ராங் சைடில் வந்தார். ஆனால் அவர் தவறு எதுவும் செய்யாதது போல், ஒரு கட்டத்தில், டாக்ஸியை விட்டு கீழே இறங்கி வந்தார். எதிரே நின்று கொண்டிருந்த காரின் டிரைவரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட சென்றது போல் தெரிகிறது. அந்த சமயத்தில் திடீர் ட்விஸ்ட்-ஆக காவலர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார்.
இதன் காரணமாக டாக்ஸி டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இருப்பினும் காவலர் தனது செல்போனில், மாருதி சுஸுகி வேகன் ஆர் டாக்ஸியின் புகைப்படங்களை உடனடியாக எடுத்து கொண்டார். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாக்ஸிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தவறு செய்த டாக்ஸி டிரைவருக்கு உடனடியாக தண்டனை கிடைத்துள்ளதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது ஆகும். புனேவில் ராங் சைடில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில், டாக்ஸி டிரைவர் மீதுதான் தவறு உள்ளது. தற்போது வைரலாக பரவி வரும் காட்சிகள் அனைத்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவானவை ஆகும். அந்த காரை முன்னேறி செல்ல விடாமல் தடுத்தது, ராங் சைடில் வந்த டாக்ஸியின் டிரைவர்தான்.
அவர் முதலில் ராங் சைடில் வந்ததே தவறு. இருப்பினும் தவறை உணராமல், மற்றொரு காருக்கு வழி விடாமல், தடுத்து நிறுத்தியது 2வது தவறு. உண்மையில் அவர் சரியாக யோசித்திருந்தால், ரிவர்ஸில் சென்றிருக்கலாம். சிறிது தூரம் ரிவர்ஸில் சென்றிருந்தாலே, எதிர்ப்புற லேனுக்கு, அதாவது அவர் பயணம் செய்ய வேண்டிய லேனுக்கு எளிதாக சென்றிருக்கலாம்.
ஏனெனில் அங்கு டிவைடரில் இடைவெளி இருந்தது. ஆனால் காவல் துறை அதிகாரி வரும் வரை வீம்பாக நின்று கொண்டிருந்த காரணத்தால், தற்போது அபராதம் செலுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களை பார்த்த பிறகாவது, ராங் சைடில் பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








