சிஎன்ஜி ஸ்டேஷனுக்கு வந்த விசித்திரமான வாகனம்... போலீசார் கொத்தா தூக்க போறாங்க!!
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படும் வேகன்ஆர் கார் சாலையில் தென்படாத இடமே கிடையாது என சொல்லலாம். ஆனால், அத்தகைய காரை இங்கு ஒருவர் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷா உடன் இணைத்துள்ளார். அதாவது, இது பாதி ஆட்டோ ரிக்ஷா, பாதி வேகன்ஆர் கார் ஆகும். இந்த விசித்திரமான வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் வாகனங்கள் மாடிஃபிகேஷன் செய்யப்படுவதை அவ்வப்போது தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அவற்றுள் சில மாடிஃபிகேஷன்கள் பலரை முகம் சுளிக்க வைக்கக்கூடியகளாக உள்ளன.

அவ்வாறு, எவரொருவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் இங்கு ஒருவர் தனது 3-சக்கர ஆட்டோ ரிக்ஷா வாகனத்திற்கு வேகன்ஆர் காரின் உடல்பகுதியை கொடுத்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில், ஆட்டோ ரிக்ஷா ஆனது மக்கள் பலரது அன்றாட போக்குவரத்து வாகனமாக விளங்குகிறது. குறிப்பாக, ஷேர் ஆட்டோ எனப்படும் குறைந்த கட்டணத்தில் செயல்படக்கூடிய ஆட்டோ சேவைகள் பல ஏழை, எளியோரின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக விளங்குகிறது.
ஷேர் ஆட்டோக்களில் குறைந்த கட்டணத்திற்கு காரணம், அவற்றில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் அழைத்து செல்லப்படுவதினால் ஆகும். ஒரே பயணத்தில் முடிந்தவரையில் அதிக பயணிகளை அழைத்து செல்வதன் மூலம் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம் என்பதால், எவ்வாறெல்லாம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்பதையே ஷேர் ஆட்டோ ஓனர்கள் யோசிக்கின்றனர்.

இத்தனைக்கும், ஷேர் ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதனையும் மீறி அதிக பயணிகளை மூச்சு முட்டும் அளவிற்கு ஷேர் ஆட்டோ ஓனர்கள் அழைத்து செல்லும் நிலையில், இங்கு ஒருவர் ஒருபடி மேல் சென்று ஆட்டோ ரிக்ஷாவுக்கு காரின் உடல்பகுதியை கொடுத்து, வாகனத்தை மேலும் பெரிதாக்கி உள்ளார்.
சிஎன்ஜி (CNG) நிரப்பும் நிலையத்திற்கு இந்த ஆட்டோ ரிக்ஷாவை கொண்டுவந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இந்த விசித்திரமான வாகனம் ஆனது சிஎன்ஜி-இல் இயங்கக்கூடியதாகும். அதிக வருவாயை பெறுவதற்காக, இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிஎன்ஜி-இல் இயங்கக் கூடியவைகளாக உள்ளன.

இந்த குறிப்பிட்ட ஆட்டோ ரிக்ஷாவை முன்பக்கத்தில் இருந்து பார்க்க பெரியதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதுவே, வாகனத்திற்கு பக்கவாட்டில் இருந்து பார்த்தால்தான் இதில் கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றம் ஆனது நமக்கு தெரிய வருகிறது. ஆட்டோ ரிக்ஷாவில் பொருத்தப்பட்டுள்ள இந்த வேகன்ஆர் ஆனது பழைய மாடல் என்பதை பார்த்தாலே அறிய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் எதற்காக விதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த மாடிஃபை செய்யப்பட்ட வாகனம் சிறந்த சாட்சியாகும். இவ்வாறான வாகனங்களை எல்லாம் போலீசார் பார்த்துவிட்டாலே கொத்தாக தூக்கிவிடுவார்கள். மேலும், இவ்வாறான வாகனங்களினால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









