சுரங்க சாலைகள் வேலைக்கு ஆகாது!! உடனே இதை மாற்றுங்கள்... மாநில அரசுக்கு ஆர்டர் போட்ட இளம் பாஜக எம்பி!
சுரங்க சாலை திட்டங்களை கைவிட்டு, அதற்கு பதிலாக மாநிலத்தில் விரைவான போக்குவரத்து அமைப்புகளை பெரிய அளவில் கொண்டுவர வேண்டும் என கர்நாடக மாநில அரசை பாஜக நாடளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார். இணையத்தில் காரச்சார விவாதத்தை கிளப்பி இருக்கும் பாஜக எம்பி-இன் இந்த கருத்தை பற்றியும், யார் அந்த பாஜக எம்பி என்பதையும் இனி பார்க்கலாம்.
ஓர் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி காண வேண்டுமெனில், அந்த நாட்டில் சாலை கட்டமைப்பு முக்கியமாக சிறப்பாக இருத்தல் அவசியம். தரமான சாலை கட்டமைப்பு என்றால், சாலைகளை அமைப்பது மட்டும் பொருளில்லை. சுரங்கங்கள், மேம்பாலங்கள் போன்றவற்றையும் தேவையான இடங்களில் கொண்டிருப்பதே ஓர் முறையான சாலை கட்டமைப்பின் சாரம்சம் ஆகும்.

ஆனால், நம் நாட்டில் மேம்பாலங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுரங்க சாலைகளை அமைப்பதில் அந்த அளவிற்கு அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த வகையில், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் சுரங்க சாலை திட்டங்களை ஆரம்பத்தில் வகுத்த மத்திய அரசு திடீரென தனது முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளது.
சுரங்க சாலைகளுக்கு பதிலாக விரைவான போக்குவரத்து அமைப்புகளை கொண்டுவர விரும்புவதாக பெங்களூர் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான எல்.எஸ் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் திட்டமோ வேறு. கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் டிகே. சிவக்குமார் கடந்த நவம்பர் 8ஆம் தேதி, "கூடுதல் சாலைகளால் எப்போதும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடிந்ததில்லை" என சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

பெங்களூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க சாலைகளை அமைக்க முயல்வதாகவும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மறுத்து பேசியுள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ போன்ற பெரிய போக்குவரத்து சிஸ்டங்கள் தான் ஒரே தீர்வு என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த எம்பி தேஜஸ்வி சூர்யாவின் டுவிட்டர் பதிவில், "போக்குவரத்து நெரிசலுக்கு அதிக சாலைகள் தீர்வாகாது. பெங்களூருவின் அதிக மக்கள் தொகைக்கு பயனளிக்கும் வகையில் சுரங்க பாதைகளுக்கு பதிலாக மக்களை விரைவாக கொண்டு செல்லும் போக்குவரத்து அமைப்புகளில் பொது பணத்தை முதலீடு செய்யுமாறு நான் அவரிடம் (சிவக்குமார்) வலியுறுத்தினேன்.

இறுதி முடிவை எடுப்பதற்கு முன் எனது பரிந்துரைகளை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும், பெங்களூர் மெட்ரோ இரயில் கார்பிரேஷன் லிமிடெட் மற்றும் இரயில் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துக்கு முழு-நேர நிர்வாக இயக்குனர்களை நியமிக்கும்படியும் சிவக்குமாரை கேட்டுக் கொண்டுள்ளதாக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
"பெங்களூர் நகரத்திற்கு தேவையான இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை முழு-நேர நிர்வாக இயக்குனர்கள் இல்லாதது பாதிக்கின்றன" என்றும் பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரில் செயல்படுத்தப்பட்டு வரும் நம்ம மெட்ரோவின் 3ஆம் கட்டம் குறித்த திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறும் கர்நாடக மாநில அரசை எம்பி தேஜஸ்வி சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்நாடக துணை முதல் டிகே சிவக்குமார் மற்றும் பாஜக பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, நிமிடக் கணக்கில் இருவரும் பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் குறித்து விவாதித்துள்ளனர். அதன்பின்னரே, மேற்கூறப்பட்டவாறு இருவரிடம் இருந்தும் கருத்துகள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications









