சொத்து மதிப்போ பில்லியன் கணக்கில்.. வைத்திருக்கும் காரோ 25 வருஷம் பழசு.. தினமும் இந்த காரைதான் யூஸ் பண்றாரு!
உலகம் அறிந்த கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக புகாட்டி (Bugatti) இருக்கின்றது. இது ஓர் சூப்பர் மற்றும் ஹைப்பர் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சிஇஓ-வாக மேட் ரைமக் உள்ளார். இவரே ரைமேக் ஆட்டோமொபிலி (Rimac Automobili) நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இத்தகைய பிரமாண்ட நிறுவனங்களைக் கட்டியாண்டுக் கொண்டிருக்கும் இந்த நபர் தன்னுடைய தினசரி பயணங்களுக்கு மிகவும் பழைய சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தி வருவதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பயன்படுத்தி வருவது 25 ஆண்டுகள் பழைய பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5) ஆகும்.
இந்த காரை மேட் ரைமேக் பயன்படுத்தி வருவதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றது. அவர் இந்த காரை அலுவலகத்திற்கு ஓட்டி செல்லும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. மேட் ரைமேக்-இன் சொத்து பில்லியன்களில் குறிப்பிடும் அளவிற்கு உள்ளது.

இத்தகைய பெரும் பணக்காரரே தன்னுடைய அன்றாட பயணங்களுக்கு 25 ஆண்டுகள் பழைய காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ எம்5 ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த கார் இப்போதும் புத்தம் புதியதுபோல் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, இன்டீரியர் ஷோரூமில் இருந்து இப்போதுதான் இறக்கப்பட்டதை போல உள்ளது. அவ்வளவு அசத்தலாக இந்த காரை அவர் பராமரித்து வருகின்றார். இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது எஸ்62 வி8 வகை எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 400 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதுபோன்று இன்னும் பல கார் மாடல்களை மேட் ரைமேக் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருடைய தலைமையில் உருவாக்கப்பட்ட கார் மாடலே டூர்பில்லன் (Tourbillon) ஆகும். இதனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய புகாட்டி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
250 யூனிட்டுகள் மட்டுமே இதனை விற்கப் போகின்றனர். ஒவ்வொரு யூனிட்டும் ரூ. 34 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட இருக்கின்றது. இது ஓர் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடல் ஆகும். 8.3 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பிரேட்டட் வி16 எனும் பிரமாண்ட மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 1000 பிஎச்பி-யை வெளியேற்றும். இந்த மோட்டாருடன் சேர்த்து 800 பிஎச்பியை உருவாக்கும் திறன் கொண்ட மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். ஆகையால், இந்த காரின் மொத்த பிஎச்பி திறன் 1800 ஆகும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 445 கிமீ ஆகும்.
இந்த அளவு உச்சபட்ச வேகத்திலேயே இந்த கார் பயணிக்கும். இதுமட்டுமல்ல வெறும் 2 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடலே டூர்பில்லன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பெரும் பணம் படைத்த செல்வந்தர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவிலும் இதுபோன்று பலர் இருக்கின்றனர். குறிப்பாக, வாகன உலகில் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா போன்ற பெரும் புள்ளிகள் எளிமைக்கு பெயர்போனவர்களாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








