கூலி படத்தையே விஞ்சிய பிரம்மாண்டம்! ஒரே நாளில் 30 வண்டிகளை தனி ஆளா டெலிவரி எடுத்துட்டு போனது அவங்களா!
பண்டிகை சமயங்களில், புதிய வாகனங்கள், புதிய வீட்டு உபகரண பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்குவது, நமது வழக்கமாக உள்ளது. எனவே பண்டிகை சமயங்களில் விற்பனை மிகவும் அதிகமாக நடைபெறும். இதில், வீட்டு உபகரண பொருட்களை பொறுத்தவரையில், அவற்றை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று டெலிவரி செய்வது வழக்கமாக இருக்கிறது.
எனவே வீட்டு உபகரண பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு, பண்டிகை சமயங்களில், பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் தேவை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக ஒரு சில சரக்கு வாகனங்களை, பண்டிகை சமயங்களில் புதிதாக வாங்குவதை, அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் மயூரி ஹோம் (Mayoori Home) நிறுவனம் ஒரே நாளில், 30 சரக்கு வாகனங்களை டெலிவரி எடுத்துள்ளது. இது கேரள மாநிலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபர்னீச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரண பொருட்களை மயூரி ஹோம் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வதற்காக ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை, மயூரி ஹோம் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த சூழலில், கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் (Onam) வெகு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த சமயத்தில் விற்பனை மிகவும் அதிகமாக நடைபெறும். இதன் காரணமாக தற்போது புதிதாக 30 மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்குகளை (Mahindra Bolero Pik-up Trucks), ஒரே நாளில் அவர்கள் டெலிவரி எடுத்துள்ளனர். இதற்காக திறந்த வெளி மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
Spulber என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மயூரி ஹோம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், டெலிவரி நிகழ்ச்சி நடத்தப்பட்ட திறந்த வெளி மைதானத்திற்கு, மிகவும் விலை உயர்ந்த கார்களில் வந்ததை, இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
இதில், ஒருவர் டொயோட்டா வெல்ஃபையர் காரில் வந்தார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 1.22 கோடி ரூபாய் முதல் 1.32 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் டொயோட்டா வெல்ஃபையர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மற்றொருவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்தார்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் 1.05 கோடி ரூபாய் முதல் 2.79 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது கவனிக்கத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரக்குகளை ஏற்றி செல்வதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் முரட்டுத்தனமான பிக்-அப் டிரக்குகளை வாங்க வேண்டும் என நினைக்க கூடியவர்களுக்கு மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக் நல்ல ஆப்ஷன். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.86 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ், கரடுமுரடான நிலப்பரப்புகளாக இருந்தாலும் கூட அனைத்து வகையான சரக்குகளையும் ஏற்றி செல்வதற்கு ஏதுவான வலிமையான பாடி, சேலிஸ் மற்றும் சஸ்பென்ஸன் ஆகியவை எல்லாம் இதன் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








