20 லட்சம் கிமீ ஓடிய பிறகும் ஷோரூம் கண்டிஷனில் இருக்கும் அதிசய கார்! அம்பாஸிடர் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்!
இன்று என்னதான் பல்வேறு புதிய கார் நிறுவனங்கள் வந்து விட்டாலும் கூட, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (Hindustan Motors) நிறுவனத்திற்கு இந்திய மக்களின் மனதில் எப்போதுமே தனி இடம் உண்டு. யாராலும், எந்த காலத்திலும் மறக்க முடியாத அம்பாஸிடர் (Ambassador) இவர்களுடைய தயாரிப்புதான்.
அந்த காலத்தில் அம்பாஸிடர் வைத்திருந்தால், அது தனி கௌரவம்தான். சாதாரண மக்கள் மட்டுமல்லாது, உயர் பொறுப்புகளை வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கூட, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார்களில்தான் வலம் வந்தனர். ஆனால் அந்த கால கட்டத்தில் ட்ரக்கர் (Trekker) காருக்கான தேவையும் அதிகமாகவே இருந்தது.

இது அதே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த ஒரு எம்யூவி (MUV) ரக கார் ஆகும். Multi Utility Vehicle என்பதன் சுருக்கம்தான் MUV. அதாவது இந்த காரை நீங்கள் பல்வேறு வகையான வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த காரில் சரக்குகளையும் ஏற்றி செல்லலாம். ஆட்களையும் ஏற்றி செல்லலாம்.
இன்று இருப்பதை போல், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரிதாக சாலை வசதிகள் கிடையாது. போதாக்குறைக்கு பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் சேவையும் பெரிதாக இல்லை. எனவே இந்தியாவின் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள், தங்கள் தினசரி பயணங்களுக்கு, ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரைதான் அதிகம் சார்ந்திருந்தனர்.

இன்றைய கால கட்டத்தில் ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரை இந்திய சாலைகளில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். நீங்கள் இங்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) கூட எளிதாக பார்த்து விடலாம். ஆனால் ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனால் இந்த அரிதான ஒரு வாய்ப்பை யூடியூப் வீடியோ (YouTube Video) ஒன்று நமக்கு வழங்கியுள்ளது. சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வைரல் வீடியோவில் (Viral Video), 28 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஒரு ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரை நமது பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த கார் 20 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேல் ஓடியுள்ளது என்பது ஆச்சரியத்தின் உச்சம்!
இதை விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த கார் இன்னமும் நன்றாக ஓடி கொண்டிருப்பதுதான்! சரி, வாருங்கள். இந்த அதிசய ஹிந்துஸ்தான் ட்ரக்கர் கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு கடந்த கால பசுமையான நினைவுகளை ஏற்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சுவாரஸ்யம்.
இந்த வைரல் வீடியோவில் பேசும் யூடியூபர், இந்த ஹிந்துஸ்தான் ட்ரக்கர் கார், தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என கூறுகிறார். ஏனெனில் இதே காரில்தான், அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தாராம். இந்த காரில் நிறைய பேர் பயணம் செய்ய முடியும் என்பதை பற்றியும் அவர் அதிகமாக பேசுகிறார்.
இதுதவிர இந்த ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரின் உரிமையாளரிடமும், யூடியூபர் பேசுகிறார். அப்போது எந்த விதமான பிரச்னைகளும் இல்லாமல் 28 வருடங்களாக இந்த ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரை பயன்படுத்தி வருவதாக உரிமையாளர் தெரிவிக்கிறார். இந்த உரிமையாளரிடம் டாடா சுமோ (Tata Sumo) காரும் இருக்கிறது.
ஆனால் அவர் ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரைதான் அதிகம் விரும்புகிறார். இந்த காரை வாங்குபவர்கள், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல விதங்களிலும் மாற்றி கொள்ள முடியும். இதைப்பற்றியும் இந்த வீடியோவில் யூடியூபர் பேசுகிறார். அத்துடன் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) குறித்தும் அவர் பேசுவதை பார்க்க முடிகிறது.
கடந்த 28 வருடங்களில் இந்த காரின் உரிமையாளர் வெறும் 2 முறை மட்டுமே இன்ஜினை பழுது பார்த்துள்ளார். ஆரம்பத்தில் வாங்கும்போது, 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன்தான் இந்த கார் வந்துள்ளது. ஆனால் அதை இந்த காரின் உரிமையாளர், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆக மாற்றம் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வைரல் வீடியோ, ஹிந்துஸ்தான் ட்ரக்கர் காரில் பயணம் செய்தவர்களுக்கு, அவர்களது கடந்த கால நினைவுகளை தூண்டுகிறது. உண்மையில் இன்று என்னதான் அதிநவீன கார்கள் வந்து விட்டாலும் கூட, அந்த கால கார்களில் செய்த பயணம் மிகவும் அலாதியானதுதான்!


Click it and Unblock the Notifications








