நடிகையின் கணவர் ஓட்டி வந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய காரை சுத்து போட்ட மக்கள்! போலீஸ் வர்ற அளவுக்கு ஆயிருச்சு!
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆயிஷா டாக்கியா (Ayesha Takia). இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பது கிடையாது. இருப்பினும் இவருக்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில் ஆயிஷா டாக்கியாவின் கணவர் ஃபர்ஹான் ஆஸ்மி (Farhan Azmi) தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். பார்ட்டிகளுக்கு பெயர் பெற்ற கோவாவில் இவர் சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) காரை ஓட்டி சென்றார். இந்த கார் தற்போதைய நிலையில் 2.55-4 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில், ஃபர்ஹான் ஆஸ்மி சிக்னல் கொடுக்காமல் லேன் மாறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த உள்ளூர் மக்கள், ஃபர்ஹான் ஆஸ்மி ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஃபர்ஹான் ஆஸ்மி ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காருக்கு வழி விடவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் பிரச்னை தீவிரமடைவதை உணர்ந்த ஃபர்ஹான் ஆஸ்மி, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதன்பின் அவர்கள் ஃபர்ஹான் ஆஸ்மி தரப்பு மற்றும் பொதுமக்கள் என 2 தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவாவின் கண்டோலிம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ வெளியாகி, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையேயும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது நல்லது.
கோவாவில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தை பொறுத்தவரையில், ஃபர்ஹான் ஆஸ்மி சிக்னல் கொடுக்காமல் லேன் மாறியதுதான், பிரச்னைக்கான ஆரம்ப புள்ளியாக கூறப்படுகிறது. உண்மையில் சிக்னல் கொடுக்காமல் லேன் மாறுவது தவறான ஒரு விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது சாலை விபத்துக்களுக்கு வழி வகுக்கலாம்.
ஆனால் ஒருவர் சிக்னல் கொடுக்காமல் லேன் மாறுகிறார் என்றால், அவருடன் சாலையின் நடுவே வாக்குவாதம் செய்து, போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது சரியான விஷயமாக இருக்காது. ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அவருடன் வாக்குவாதம் செய்வதற்கு பதிலாக, வீடியோ எடுத்து ஆதாரத்தை உருவாக்கலாம்.
பின்னர் அந்த வீடியோ ஆதாரத்தை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தலாம். வாக்குவாதம் செய்வதை காட்டிலும் இதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். இதை அனைவரும் புரிந்து கொண்டால், சாலைகளில் தேவையில்லாமல் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








