டாடா இந்த அளவுக்கு வளர மெஸ்ஸி காரணமா! இக்கட்டான நேரத்துல கை குடுத்து தூக்கி விட்டது நிறைய பேருக்கு தெரியாது!
ஃபிபா உலக கோப்பையை (FIFA World Cup) அர்ஜென்டினா (Argentina) வென்றுள்ளது. இதன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி (Lionel Messi), உலக கோப்பையை வென்ற வீரராக மாறியுள்ளார். கால்பந்து (Football) உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், மெஸ்ஸி என்ற மாயாஜாலக்காரருக்கு உலக கோப்பை கனவு மட்டும் நிறைவேறாமல் இருந்தது.
ஆனால் கத்தார் (Qatar) நாட்டில் நடைபெற்ற 2022 ஃபிபா உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றதன் மூலம், மெஸ்ஸியின் பல ஆண்டு கால ஏக்கம் தணிந்துள்ளது. இதற்காக மெஸ்ஸிக்கும், அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்தியாவிலும் மெஸ்ஸிக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலை தள பக்கங்கள் அனைத்தும் தற்போது மெஸ்ஸின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த நேரத்தில் மெஸ்ஸிக்கும், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கும் இடையே இருந்த உறவை நினைவுகூர்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலரை தனது பிராண்ட் அம்பாஸிடராக நியமனம் செய்துள்ளது. இதில், மெஸ்ஸியும் ஒருவர். உங்கள் வாழ்க்கையில் சில வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்யுங்கள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் மெஸ்ஸி தோன்றியது உங்கள் நினைவிற்கு வரும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், மெஸ்ஸியை தனது சர்வதேச பிராண்ட் அம்பாஸிடராக நியமனம் செய்தது. இதன் மூலம் மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடியான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கவே செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தடுமாறி கொண்டிருந்த சமயத்தில், மெஸ்ஸியின் முகம், அந்நிறுவனத்தின் கார்களை அனைவரது மனதிலும் பதிய செய்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டில் ஜிகா (Zica) என்ற பெயரில், புதிய கார் ஒன்றை உருவாக்கியிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் ஜிகா (Zika) வைரஸ் பிரச்னை தலைவிரித்தாடியது. எனவே ஜிகா என்ற பெயரை, டியாகோ (Tiago) என மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆளானது. இப்படிப்பட்ட நெருக்கடியான ஒரு சமயத்தில்தான், டாடா டியாகோ காரின் விளம்பரங்களில் மெஸ்ஸி நடித்தார். அதன்பின் நடந்தது எல்லாம் வரலாறு.
டாடா டியாகோ இன்று இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை டாடா டியாகோ காப்பாற்றியுள்ளது. மெஸ்ஸியுடன், அருமையான பாதுகாப்பு தரமும் இந்திய சந்தையில் டாடா டியாகோ காரின் விற்பனை அதிகரிக்க முக்கியமான காரணமாக மாறியது. தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது. விலை மிகவும் குறைவு என்பதால், இந்தியாவில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து விட்டனர். இந்திய சந்தையில் ஒரு எலெக்ட்ரிக் காருக்கு இவ்வளவு முன்பதிவுகள் கிடைத்திருப்பது என்பது உண்மையிலேயே சாதாரணமான விஷயம் அல்ல. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. இதன் மூலம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெஸ்ஸி தற்போது, டாடா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இல்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ், மெஸ்ஸி என இருவருமே தங்கள் துறைகளில் சாதனைகளை படைத்து கொண்டு, வேகமாக முன்னேறி வருகின்றனர்!


Click it and Unblock the Notifications