உலகையே திரும்பி பார்க்க வைத்த ராஜ தந்திரம்! பிரபல சீன நிறுவனம் இந்தியாவின் பிடிக்குள் வருகிறது! கொடி பறக்குதா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) உள்ளிட்ட பல்வேறு கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.
இதுதவிர எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் (Electric Cars) எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு கூடி கொண்டே செல்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எலெக்ட்ரிக் கார்கள் உள்பட பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கான நிதி கிடைப்பதில் ஒரு சிக்கல்கள் இருக்கின்றன.
சீனாவை (China) சேர்ந்த செயிக் குழுமம்தான் (SAIC Group), எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகும். அதாவது செயிக் குழுமம்தான், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனம். மத்திய அரசின் ஒரு சில தடைகள் காரணமாக, தனது தாய் நிறுவனத்திடம் இருந்து நிதி திரட்ட முடியாத சூழலில், எம்ஜி மோட்டார் இருந்து வருகிறது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு எல்லையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் உருவான நிலையில், சீனா நிறுவனங்களுக்கு இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே செயிக் குழுமத்திடம் இருந்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் நிதி பெறுவதில் பிரச்னைகள் உருவானது.
எனவே இந்திய சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் திட்டங்கள் முடங்கின. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில்தான் இந்த தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் நிதி கிடைக்காத காரணத்தால், இந்த திட்டமும் முடங்கி கிடக்கிறது. எனவே சுமார் 45-48 சதவீத பங்கை இந்திய தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னால் மிகப்பெரிய வியாபார யுக்தி இருக்கிறது.
இந்திய தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதன் மூலம், தனது சீன அடையாளத்தை எம்ஜி மோட்டார் நிறுவனத்தால் சற்று குறைத்து கொள்ள முடியும். அத்துடன் இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து போதுமான அளவிற்கு நிதியும் கிடைக்கும். எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்வதற்கு ஏதுவாகவும் இது அமையும்.
இதற்கிடையே இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தை (JSW Group) சேர்ந்த தொழிலதிபர் சஜன் ஜிண்டால் (Sajjan Jindal), எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பங்குகளின் பெரும்பகுதியை கைப்பற்ற உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்கள், மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றும் முயற்சியில் இந்தியாவை சேர்ந்த பிரபல நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா (Mahindra and Mahindra) களமிறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. கூடவே இந்தியாவின் மற்றொரு முன்னணி நிறுவனமான ஹிந்துஜா குழுமமும் (Hinduja Group) இந்த கோதாவில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஹிந்துஜா குழுமம்தான், அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளதால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றி அதன் புதிய உரிமையாளராக மாறப்போகும் இந்தியர் அல்லது இந்திய நிறுவனம் எது? என்ற கேள்விக்கு கூடிய விரைவில் நமக்கு அதிகாரப்பூர்வமாக பதில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









