விலை உயர்ந்த பைக்கில் வீடு வீடாக பால் விற்கும் இளைஞர்! எவ்ளோனு தெரிஞ்சா ஐஸ் கட்டி மாதிரி ஒறஞ்சு போயிருவீங்க!
நாம் எல்லாம் குழந்தைகளாக இருந்த காலகட்டத்தில், காலையும், மாலையும் பால்காரர்கள் (Milkman) வீட்டிற்கு வருவார்கள். பெரும்பாலும் சைக்கிள்தான் அவர்களது ஆஸ்தான வாகனமாக இருக்கும். அதன் பின்னால் உள்ள கேரியரில், 2 அல்லது 3 கேன்கள் கட்டப்பட்டிருக்கும். அதில் உள்ள பாலை வீடு, வீடாக ஊற்றி செல்வார்கள்.
பின்னர் காலம் மாற மாற பால்காரர்களும் சைக்கிள்களில் இருந்து மோட்டார் வாகனங்களுக்கு மாறினார்கள். உங்களுக்கு பஜாஜ் எம்80 நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் அதிகமாக ஓடி கொண்டிருந்த வண்டிகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக பால்காரர்கள் நிறைய பேர் பஜாஜ் எம்80 வண்டியை பயன்படுத்தினார்கள். பால் கேன்களை வைத்து கொண்டு செல்வதற்கு சௌகரியமாக இருந்ததுதான் இதற்கு காரணம். இதனால் பால்காரர்கள் வண்டி என்ற பெயரையும் கூட பஜாஜ் எம்80 எடுத்தது.

இதற்கு பிறகு ஹீரோ ஸ்பிளெண்டர் போன்ற வாகனங்களுக்கு பால்காரர்கள் மாறினார்கள். இவை எல்லாம் சாமானிய மக்கள் கூட பயன்படுத்தும் வாகனங்கள்தான். எனவே பால்காரர்கள் இந்த வாகனங்களை பயன்படுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் தற்போது ஒரு பால்காரர், மிகவும் விலை உயர்ந்த பைக் ஒன்றில் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் பயன்படுத்துவது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 (Harley Davidson Street 750) பைக் ஆகும்!
பொதுவாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளை வாங்குவதற்கு முன்பு மக்கள் ஒரு முறைக்கு இரு முறை அல்ல, 100 முறை யோசிப்பார்கள். ஏனெனில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. உலகில் மிகவும் அதிகமான விலையில் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஹார்லி டேவிட்சனும் ஒன்று. ஹார்லி டேவிட்சன், அமெரிக்காவை சேர்ந்த பைக் நிறுவனம் ஆகும். இந்தியாவிலும் இந்நிறுவனம் தனது பைக்குகளை விற்பனை செய்து வந்தது.
ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்க மாட்டார்கள். இந்தியர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என்பதால், இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை சொல்லி கொள்ளும்படி இல்லை. எனவே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை நிறுத்தி கொண்டு, சந்தையை விட்டு வெளியேறி விட்டது. எனினும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக பைக்குகளை வாங்கியவர்கள் இன்றும் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
நாம் இங்கே பேசி கொண்டுள்ள பால்க்காரரும், அந்த வகையில்தான் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் ஆரம்ப விலை 4.70 லட்ச ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 5.50 லட்ச ரூபாயாக இருந்தது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இவை, இந்த பைக் கடைசியாக இந்தியாவில் விற்பனையில் இருந்தபோது நிர்ணயிக்கப்பட்டிருந்த விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டதால், தற்போது ஸ்ட்ரீட் 750 பைக் கிடைப்பதில்லை. வேண்டுமானால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியே கிடைத்தாலும் இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை வாங்குவதற்கு நம்மில் பலரும் முன்வர மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு மிகவும் விலை உயர்ந்த பைக்கில்தான் நாம் இங்கே பேசி கொண்டுள்ள பால்க்காரர், பால் வியாபாரம் செய்து வருகிறார்.
ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? என்ற விபரம் வெளியாகவில்லை. ஆனால் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் பின்னால் பால் கேன்களை கட்டி கொண்டு, சாலையில் அவர் வலம் வரும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral) ஆக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே இந்த நபர் பயன்படுத்தும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு பின்னால் உள்ள நம்பர் பிளேட்டில், Gujjar என எழுதப்பட்டுள்ளது. குஜ்ஜார் என்பது ஒரு சமூகத்தின் பெயர் ஆகும்.
இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், வட இந்தியாவில் அதிகமாக வசிக்கின்றனர். எனவே இந்த பால்க்காரர், குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் நம்பர் பிளேட்டில் இப்படி சமூகத்தின் பெயரை குறிப்பிட்டிருப்பது விதிமுறை மீறல் ஆகும். இந்த நம்பர் பிளேட்டில் எண்கள் எதுவுமே இல்லை. வாகனத்தின் நம்பர் பிளேட்கள் இப்படி இருக்க கூடாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே, போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே அவர் பயன்படுத்தும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, மிகவும் சக்தி வாய்ந்த 749 சிசி இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 60 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற பல்வேறு வசதிகளை, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக் பெற்றுள்ளது. ஒரு ராயல் என்பீல்டு பைக்கையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவையே நம்மில் பலராலும் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஒருவர் பால் வியாபாரம் செய்வது என்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!


Click it and Unblock the Notifications