இவ்ளோ பெரிய அபராதத்தை இதுக்கு முன்னால கேள்விபட்டதே இல்ல! ஸ்பீடு லிமிட்டை தாண்டியதுக்கே இப்படியா! நம்பவே முடியல
இந்தியாவில் நடைபெற்று வரும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் கடுமையாக இல்லாதது இதற்கு நிச்சயமாக ஒரு காரணம்தான். ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் இப்படி அல்ல.
அங்கெல்லாம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி விட்டால், யாராக இருந்தாலும் விதிமுறைகளின்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பின்லாந்தில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டிய ஒருவருக்கு அங்கு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தை சேர்ந்தவர் ஆண்டர்ஸ் விக்லாஃப். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டிய ஒரு சாலையில், அதைக்காட்டிலும் அதிக வேகத்தில் ஆண்டர்ஸ் விக்லாஃப் பயணம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு 1.21 லட்சம் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 1 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
துல்லியமாக சொல்வதென்றால், 1.07 கோடி ரூபாய். ஆண்டர்ஸ் விக்லாஃபிற்கு தற்போது 76 வயதாகிறது. இவர் கோடீஸ்வரர் ஆவார். பின்லாந்தை பொறுத்தவரையில், போக்குவரத்து விதிமுறை மீறலின் தீவிரத்தை பொறுத்து மட்டும் அபராதம் விதிக்கப்படாது. கூடவே போக்குவரத்து விதிமுறைகளை மீறியவரின் வருமானமும் கணக்கில் கொள்ளப்படும்.

இவை இரண்டின் அடிப்படையில்தான், அபராதம் விதிக்கப்படும். எனவேதான் ஆண்டர்ஸ் விக்லாஃபிற்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டர்ஸ் விக்லாஃப் போக்குவரத்து விதிமுறையை மீறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாகவே அவர் பலமுறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு சுமார் 84 லட்ச ரூபாயும், அதற்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கடந்த 2018ம் ஆண்டில், 56 லட்ச ரூபாயும் ஆண்டர்ஸ் விக்லாஃபிற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை, நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் சரிதான் என ஆண்டர்ஸ் விக்லாஃப் கூறியுள்ளார்.
இதுபோன்ற அபராத தொகையை விதிப்பதை இந்தியாவில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இங்கு அரசியல் கட்சிகளில் சாதாரண பொறுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கூட, அபராத தொகையை செலுத்துவதில்லை. சரி, இந்த கதைகள் எல்லாம் எதற்கு? இந்த சமாச்சாரங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அளவு கடந்த சுதந்திரமும், தொடர்ச்சியாக கருணை காட்டி கொண்டே இருப்பதும் பின் நாட்களில் நிச்சயம் பெரும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








