சபதம்... அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்க போகும் இந்தியா... வேற வேலை எதாவது இருந்தா பாத்துக்கங்கப்பா!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களால், இந்தியா ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த 2 பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் (Alternative Fuel Vehicles) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு யூகங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக (Union Minister For Road Transport And Highways) பணியாற்றி வரும் நிதின் கட்கரி (Nitin Gadkari), தற்போது வெளிப்படையாக ஒரு சில விஷயங்களை பேசியுள்ளார்.
பெட்ரோல், டீசல் வாகனங்களிடம் இருந்து இந்தியாவால் விடுபட முடியுமா? என்ற கேள்விக்கு, இது 100 சதவீதம் சாத்தியம் என அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்கள் இல்லாமல் இந்தியாவால் இயங்க முடியும் என்பதுதான் அவரது பதிலின் சாராம்சம்.

எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அது எப்போது? என்பதை உறுதியாக கூற முடியாது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''இது எப்போது நடக்கும்? என்ற தேதி மற்றும் வருடத்தை என்னால் தற்போது கூற முடியாது. ஏனெனில் இது மிகவும் கடினமான விஷயம்.
இது கடினமான ஒரு விஷயம்தான். ஆனால் சாத்தியம் இல்லாத விஷயம் எல்லாம் கிடையாது'' என தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 16 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் இந்த 16 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டால், இந்திய விவசாயிகளின் வாழ்க்கை பிரகாசமாகும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சியடையும் எனவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'குட்பை' சொல்ல வேண்டும் என்பதற்காக, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரியை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அமைச்சர் நிதின் கட்கரி தற்போது தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஹைப்ரிட் வாகனங்களுக்கு (Hybrid Vehicles) தற்போதைய நிலையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதை வெறும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரி விரும்புகிறார். மறுபக்கம் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel Vehicles) மீதான ஜிஎஸ்டி வரியும் தற்போதைய நிலையில் 28 சதவீதமாகதான் உள்ளது.
இதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரி விரும்புகிறார். இந்த கோரிக்கை நிதியமைச்சகத்திற்கு (Finance Ministry) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களின் விலை குறையும்.
எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கி கொண்டுள்ள பலரும், ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை வாங்க முன்வருவார்கள். இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்களும், இத்தகைய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டும். இவ்வாறாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு படிப்படியாக முடிவுரை எழுத மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் விலையை குறைத்து விட்டால், மக்கள் தாங்களாகவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு விடை கொடுத்து விடுவார்கள் என நாங்கள் கருதுகிறோம்.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலை போல், மாற்று எரிபொருட்களும் பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு விரும்பும் மாற்றம் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் சுமூகமாக நடக்கும்.
தற்போதைய நிலையில் உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அது கச்சா எண்ணெய் வளத்தை நம்பி கொண்டுள்ள நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் எனவும் நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








