டெஸ்லாவின் அமெரிக்க ஃபேக்ட்ரிக்கு கெத்தா விசிட் கொடுத்த அமைச்சர்!! எலான் மஸ்க் சொன்னது இதைதான்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையை இந்திய தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் நேரில் பார்வையிட்டு உள்ளார். எதற்காக இந்த சந்திப்பு? டெஸ்லா சிஇஓ-வும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கை பியூஷ் கோயல் நேரில் சந்தித்தாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.
உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக டெஸ்லா விளங்குகிறது. அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, உலகின் பல நாடுகளில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னமும் டெஸ்லா தனது மார்க்கெட்டை துவங்கவில்லை.

அதிக மக்கள் தொகை மற்றும் சாலை கட்டமைப்பை கொண்ட நாடு என்பதினால், இந்தியாவில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த டெஸ்லா கடந்த சில வருடங்களாக முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், எந்த முயற்சியும் இதுவரையில் வொர்க் அவுட் ஆனது போல் தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை நேரில் சந்தித்து இருந்தார்.
அப்போது, டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, விரைவில் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை டெஸ்லா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையை தற்போது நேரில் பார்வையிட்டு உள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற இந்திய அமைச்சர் பியூஷ் கோயல், அங்கு டெஸ்லா நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசியதோடு, உற்பத்தி செய்யப்பட்டு வந்த எலக்ட்ரிக் கார்களுக்குள் அமர்ந்தும் பார்த்துள்ளார். டெஸ்லாவின் அமெரிக்க தொழிற்சாலைக்குள் இந்திய அமைச்சர் பார்வையிடும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்ட பிறகு பேசிய பியூஷ் கோயல், இந்தியாவில் இருந்து ஆட்டோ பாகங்கள் இறக்குமதியை டெஸ்லா இரண்டு மடங்காக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார். அத்துடன், திறமையான இந்திய பொறியியலாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் டெஸ்லாவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகன விநியோக சங்கிலியில் இந்திய ஆட்டோ பாகங்கள் விநியோகிப்பாளர்களின் அதிகரித்துவரும் தேவையையும் அமைச்சர் ஹைலைட் படுத்திக் கூறினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொழிற்சாலைக்கு வந்த சமயத்தில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அங்கு இல்லை.
அமைச்சரின் வருகையை அறிந்த எலான் மஸ்க் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், "நீங்கள் டெஸ்லாவை பார்த்தது ஒரு மரியாதை! இன்று கலிஃபோர்னியாவுக்கு என்னால் பயணிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார். இந்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மொத்தம் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பியூஷ் கோயல் டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்டு இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, டெஸ்லா இந்திய மார்க்கெட்டிற்குள் நுழையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில், நிஜ உலக சோதனைகளுக்காகவே பெரும்பாலும் இவ்வாறு உற்பத்தி தொழிற்சாலையை முக்கிய அதிகாரிகள் பார்வையிடுவது வழக்கம்.


Click it and Unblock the Notifications









