சொன்னப்படி பணம் தரவில்லை!! இரயில் என்ஜினை பிடித்து வைத்து கொண்டு இரயில்வேக்கு தண்ணி காட்டிய தனியார் நிறுவனம்!
இந்தியாவில் வாகன திருட்டுகள் பரவலாக நடக்கக்கூடிய ஒன்றே. வீட்டின்/கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் திருடு போன சம்பவங்கள் குறித்த சிசிடிவி வீடியோக்களை சமீப காலமாக அதிகளவில் பார்த்து வருகிறோம். ஆனால், அவ்வாறு திருடு போன வாகனங்கள் பைக்குகள் அல்லது கார்களாகவே இருக்கும். லாரி அல்லது பேருந்துகள் திருடு போன சம்பவங்களை கூட அதிகளவில் நாம் பார்த்தது இல்லை.
ஏனெனில் வாகனங்களின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அவற்றை திருடுவதும், திருடிய பின் மறைத்து வைப்பதும் கடினமானது (மலேசியாவில் இருந்து காணாமல் போன விமானம் மட்டும் இதில் விலக்கானது). ஆனால், இரயில்வே துறைக்கு துணை-ஒப்பந்தத்தாரராக பணியாற்றி வந்தவர் ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்ட பெரிய அளவிலான இரயில் என்ஜினை திருடி, மொத்த இந்திய இரயில்வே துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பையில் இருந்து ஹரியானா மாநிலம் கல்கா என்ற பகுதிக்கு இரயில் என்ஜினை சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என ஸ்ரீ ஜேபி கிரைன் டீலர்ஸ் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்திய இரயில்வே அமைச்சகம் ஒரு பணியை வழங்கியது. ஸ்ரீ ஜேபி கிரைன் டீலர்ஸ் ஒப்பந்த நிறுவனம் இந்திய இரயில்வே நிர்வாகம் தனக்கு வழங்கிய இந்த பணியை தனக்கு கீழ் இயங்கும் ராதா ரோட்வேஸ் என்ற துணை ஒப்பந்த நிறுவனத்திற்கு மாற்றி வழங்கியது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ராதா ரோட்வேஸை சேர்ந்த பணியாளர்கள் தாங்கள் கொண்டுவந்த லாரியில் தங்களிடம் வழங்கப்பட்ட இரயில் என்ஜினை மும்பையில் இருந்து ஹரியானா, கல்கா பகுதிக்கு கொண்டு செல்லும் வேலையை துவங்கினர். அதன்பின், ஏற்கனவே அறிவித்தப்படி, கல்காவில் இருந்து இசட்.டி.எம்3 என்ற இரயில் என்ஜினை மும்பைக்கு கொண்டு செல்ல வேண்டிய வேலை ராதா ரோட்வேஸுக்கு வந்தது.
இந்த அப் & டவுன் போக்குவரத்துக்காக ஸ்ரீ ஜேபி கிரைன் டீலர்ஸிடம் இந்திய இரயில்வே வழங்குவதாக ஒப்புக்கொண்ட தொகை ரூ.4.25 லட்சம் ஆகும். இதில் முதற்கட்டமாக, ரூ.2 லட்சம் முன்தொகையாக பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த ராதா ரோட்வேஸிடம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன்பின், மே 6ஆம் தேதி மேலும் ரூ.1 லட்சமும், மே 19ஆம் தேதி மேலும் ரூ.1 லட்சமும் ராதா ரோட்வேஸிடம் வழங்கப்பட்டது.
சொன்னதுபோல் போக்குவரத்துக்கான தொகையை இரயில்வே நிர்வாகம ராதா ரோட்வேஸிடம் வழங்கிவிட்டதை அறிந்த ஜேபி கிரைன் டீலர்ஸ் மும்பையில் ராதா ரோட்வேஸின் டெலிவிரிக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தது. ஆனால் இசட்.டி.எம்3 என்ஜின் திட்டமிட்டப்படி கொண்டுவருவதுபோல் தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜேபி கிரைன் டீலர்ஸ் நிறுவனம் கல்கா பகுதியில் என்ஜினை ஏற்றி அனுப்பி வைத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

அதன்பின், ராதா ரோட்வேஸின் உரிமையாளர் சர்மாவை ஜேபி கிரைன் டீலர்ஸின் உரிமையாளர் குப்தா தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுதான், டெலிவிரி வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குப்தாவுக்கு தெரியவந்தது. ஜேபி கிரைன் டீலர்ஸுக்கும், ராதா ரோட்வேஸுக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. அதாவது, ராதா ரோட்வேஸுக்கு கொடுக்க வேண்டியதாக ஏற்கனவே ரூ.1 லட்சம் பாக்கி இருந்துள்ளது.
இருப்பினும் இந்த சவாரியை ஏற்று கொண்ட ராதா ரோட்வேஸின் உரிமையாளர் சர்மா இந்த சவாரியிலும் ரூ.4 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், ரூ.25,000 நிலுவையில் உள்ளதாகவும், ஏற்கனவே தர வேண்டிய ரூ.1 லட்சத்துடன் இந்த சவாரிக்கான நிலுவை தொகை மற்றும் கூடுதலாக ரூ.60,000ஐ வழங்கினால் மட்டுமே இரயில் என்ஜின் மும்பையில் டெலிவிரி செய்யப்படும் என குப்தாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த இரு ஒப்பந்த நிறுவனங்களிடையே இந்த விவாதம் சில வாரங்களுக்கு நடந்து வந்த நிலையில், இரயில்வே அமைச்சகத்தின் அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜூலை 2ஆம் தேதி சர்மா மீது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் குப்தா புகார் அளித்தார். புகாரை கேட்ட போலீஸார் கூட இரயில் என்ஜின் காணவில்லையா என ஒரு நிமிஷம் திகைத்து நின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புகாரை விசாரித்த போலீஸார் ஷர்மாவை கண்டறிந்து, அவரிடம் இருந்து இரயில் என்ஜினை மீட்டு மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சுமார் ரூ.5 கோடியில் அளவில் பெரியதாக, மிகுந்த எடையில் உருவாக்கப்பட்ட இரயில் என்ஜின் ஒன்று காணாமல் போன செய்தியை நாங்களும் இதுவரையில் கேள்விப்பட்டதே இல்லை. இரயில் என்ஜினை தண்டவாளம் வழியாக திருடுவது என்பது உண்மையில் முடியாத காரியம். இவ்வாறு சாலை வழியாக எடுத்து செல்லும்போது திருடினால் மட்டுமே உண்டு.


Click it and Unblock the Notifications








