சாலையை பயன்படுத்த முடியல, இரயிலில் பயணிக்கிறேன்... தமிழக முதல்வருக்கே இந்த நிலைமையா!! அப்போ மக்களின் நிலை
நம் இந்தியா போன்ற நாட்டில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு இருத்தல் அவசியம். அப்போதுதான், மக்களுக்கு தேவையான திட்டங்கள் உடனடியாகவும், எந்தவொரு பிரச்சனையின்றியும் வந்து சேரும். இல்லையெனில் சில பல வாக்குவாதங்களுக்கும், வலுவான கோரிக்கைகளுக்கும் பின்பே எந்தவொரு திட்டத்தையும் பெற வேண்டியிருக்கும்.
இந்த நிலைமை தான் தற்போது நமது தமிழ்நாட்டிலும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பில் மற்ற மாநிலங்களுக்கு வாரி வாரி வழங்கும் மத்திய அரசு நம் தமிழகத்திற்கு என்று வரும்போது மட்டும் கொஞ்சம் வஞ்சனை பார்க்கிறதா என்கிற சந்தேகம் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்துள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டிற்குள் செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி முதல்வரே நேரடியாக மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

என்.எச்4 என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை எண்.4 -ஐ பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்.எச்4 என்ற பெயரில் திரைப்படம் ஒன்று கூட சில வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. மும்பையில் துவங்கும் இந்த நெடுஞ்சாலை மும்பை, புனே, பெங்களூர் மற்றும் சென்னை என தென்னிந்தியாவின் 4 முக்கிய மாநகரங்களை ஒருங்கிணைத்து சென்னையில் முடிகிறது.
குறிப்பாக, சாலைவழியில் பெங்களூர் மற்றும் சென்னையை இணைக்கும் உயிர்நாடியாக இந்த என்.எச்4 விளங்குகிறது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியான ஒசூரில் இருந்து அருகில் உள்ள துறைமுகமான சென்னை துறைமுகத்தை விரைவாக எட்ட பெருந்துணையாக உள்ளது. இத்தனைக்கும், இந்த நெடுஞ்சாலை ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குள் செல்வதில்லை. ஆந்திரா மாநிலம், சித்தூர் வழியாகவே பெங்களூரை சென்னை உடன் இணைக்கிறது.

சரி விஷயத்திற்குள் வருவோம், சென்னை - பெங்களூர் இடையே என்.எச்4 -இன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை வரையிலான பகுதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நெடுஞ்சாலை பகுதியினால் நேரடியாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர், இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு தான் இரயிலில் செல்ல நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் இருந்து இராணிப்பேட்டை வரையிலான என்.எச்4 சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையையும் தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்த போதிலும் மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பொதுவான & உறுதியற்ற பதிலால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், எந்தவொரு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டமும் அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படாதது என நேர்மையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் வேளையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் மாநில அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்பது போன்ற தோற்றம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது எனவும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திரு. தயாநிதி மாறன் அவர்கள் குறிப்பிட்ட கோரிக்கையை பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், என்.எச்4-இல் ஸ்ரீபெரும்புதூர் - இராணிப்பேட்டை வரையிலான சாலையில் 6 வழிப்பாதை பணி நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்த பிரச்சனையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








