ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 1க்கு வழங்கிய எம்எல்ஏ... இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் நமக்கு கிடைக்கலையேங்க!!
ஒரு லிட்டர் பெட்ரோலை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு எம்எல்ஏ ஒருவர் விற்பனைச் செய்த சம்பவம் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவின் எந்த பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியது?, எதற்காக ரூ. 1க்கு பெட்ரோல் விற்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் ரூ. 100ஐக் கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110.85-க்கும், டீசல் ரூ. 100.94-க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 18 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி இவை விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்த விலையானது மிக மிக அதிகம். கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மிக அதிக விலையில் அவை விற்கப்படுகின்றன. இந்த நிலையே நாடு முழுவதும் தென்படுகின்றது. இதனால் ஏழை மற்றும் எளிய மக்கள் மிகக் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளன. இது மேலும் மக்களுக்கு கூடுதல் பாரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவின் குறிப்பிட்ட ஓர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியிலேயே இந்த வியப்பூட்டும் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.

சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பிரதாப் சர்னைக் என்பவரே ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்க காரணமானவராக இருக்கின்றனர். இன்று (ஏப்ரல் 25) அவருக்கு பிறந்த நாள் என கூறப்படுகின்றது. இந்த தினத்தை தொகுதி மக்களுடன் கொண்டாடும் விதமாகவும், அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் பிரதாப் ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய்க்கு விற்பனைக்கு வழங்கியிருக்கின்றார்.

கோத்பந்தர் சாலையில் அமைந்துள்ள கைலாஷ் பெட்ரோல் நிலையம் வாயிலாகவே அவர் ஒரு ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனைக்கு வழங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் பிரதாப்பின் இந்த செயல் தொகுதி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

ஆயிரம் இருசக்கர வாகன ஓட்டிகள் இதன் வாயிலாக பலனடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்காக பிரதாப் ரூ. 1.20 லட்சம் வரை செலவு செய்திருக்கின்றார். ரூ. 1-க்கு பெட்ரோல் வழங்கப்பட்டதால் அந்த பகுதியே வாகன நெரிசலுடன் காணப்பட்டது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் மக்கள் அலை மோத தொடங்கியிருக்கின்றனர்.

அதேநேரத்தில், அனைவரும் வரிசை கட்டி நின்று பெட்ரோலை வாங்கி சென்றனர். காலை 10 மணிக்கே பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கும் நிகழ்வு தொடங்கிவிட்டதால், காலையிலேயே பெட்ரோல் பங்க்கில் நெரிசல் அதிகமாக தென்பட தொடங்கிவிட்டது.

சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. தானேவில் உள்ள இளைஞர்கள் பலர் புனே வரை பணிக்காக செல்லும் சூழல் நிலவுகின்றது. இது அவர்களுக்கு பெருத்த செலவீணத்தை வழங்குகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாள் அவர்களின் வேதனையில் பங்களிக்கும் விதமாக பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கும் நிகழ்வை நிகழ்த்தியதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் இந்த நிகழ்விற்கு அமோக வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இன்றை நிலவரப்படி தானேவில் ஒரு லிட்டர் ரூ. 120.58-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 104.83க்கும் விற்கப்படுகின்றது. அதேநேரத்தில், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 105.41க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 96.67க்கும் விற்கப்பட்டு வருகின்றது.

Source:freepressjournal
நாட்டிலேயே உச்சபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 122 ரூபாய் மற்றும் 67 காசுகளுக்கு விற்கப்படுகின்றது. இதேபோல், டீசல் ஒரு லிட்டர் 105 ரூபாய் மற்றும் 11 காசுகளுக்கு விற்கப்படுகின்றது. சில நாட்களுக்கு முன்னர் வரை இதைவிட பல மடங்கு அதிக விலையில் இந்த மாவட்டத்தில் எரிபொருள்கள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








