சீனா... இப்போ போட்டிக்கு வா!! பிரதமர் நரேந்திர மோடியால் அமெரிக்க பயணத்தில் ஒப்பந்தமாகும் இராணுவ திட்டம்!!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 20) அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் முக்கிய ஜெட் என்ஜின் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அமெரிக்காவில் என்னென்ன நிகழ்ச்சிகளில் நம் பிரதமர் கலந்துக் கொள்ளவுள்ளார்? என்பவற்றை இனி பார்க்கலாம்.
2014ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற பின்பு 6வது முறையாக நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார். ஜூன் 24ஆம் தேதி வரையில் அமெரிக்காவில் தங்க உள்ள பிரதமர் மோடி இந்த பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனின் அழைப்பின் பெயரில் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூன் 21ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார். இந்த யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே முக்கியமாக இந்த அமெரிக்க பயணத்தை பிரதமர் மேற்கொள்கிறார். இருப்பினும், அதன்பின் சில கலந்துரையாடல்களில் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
21ஆம் தேதி நியூயார்க்கில் கொண்டாட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, ஜூன் 22ஆம் தேதி வாஷிங்டன் டிசி -இல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான கே-ஹால் (GE-HAL) ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையும் இரு நாட்டு தலைவர்களிடையே இருக்கும் என கூறப்படுகிறது.

GE-HAL திட்டமானது இராணுவ விமானத்திற்கு தேவையான எஃப்414 ஜெட் என்ஜின்களை இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து உருவாக்கும் திட்டமாகும். இந்த திட்டம் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். முக்கியமாக, இந்திய இராணுவத்தின் பலம் அதிகரிக்கும். அமெரிக்க இராணுவத்தின் பலமும் அதிகரிக்கும். ரஷ்யாவை இந்த விஷயத்தில் இந்தியா சார்ந்திருக்க வேண்டியிருக்காது.
அதுமட்டுமின்றி, சீனாவுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ பலத்தை காட்டுவதாக அமையும். இந்திய வடக்கு பகுதிகளில், நேபாளத்தை ஒட்டிய எல்லை பகுதிகளில் சமீப ஆண்டுகளாக சீன இராணுவத்தினர் அத்துமீறி முகாமிட்டு வருகின்றனர். அவர்களை பயமுறுத்தி அனுப்புவதே அங்கிருக்கும் நமது இராணுவத்தினருக்கு வேலையாக உள்ளது. இதனால், தற்போதைக்கு சற்று குறைந்திருந்தாலும் இந்தியா- சீனா இடையே போர் நிலவும் சூழல் கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது.

ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அதன்பின் ஐக்கிய அமெரிக்க பேரவை உறுப்பினர்களையும் சந்தித்து பேசவுள்ளார். இந்த கலந்துரையாடலின் போதுதான் எஃப்414 ஜெட் என்ஜின்கள் உற்பத்தி குறித்த ஒப்பந்தம் நடைபெறும் என கூறப்படுகிறது. எஃப்414 ஜெட் என்ஜின் ஆனது ஜெனரல் எலக்ட்ரிக் விமான நிறுவனத்தினால் உருவாக்கப்படும் ஆஃப்டர்-பர்னிங் டர்போ ஃபேன் என்ஜின் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய இராணுவத்தின் பலத்தை கூட்டும் என்பதாலேயே GE-HAL திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் நமது மத்திய அரசு உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற, வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமரின் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் அதன்பின் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு செல்லவுள்ளார்.


Click it and Unblock the Notifications









