இலங்கைக்கு போயிட்டு வந்த அதிர்ஷ்டமா இருக்குமோ! பல கோடி ரூபா காரை வாங்கிட்டாரு நம்ம சிராஜ்! என்ன காரு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் முகமது சிராஜ் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க செய்திருக்கின்றார். இவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்று பயணம் சென்றிருந்தார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட இவர் சமீபத்தில் நாடு திரும்பினர். நாடு வந்த கையோடு ஓர் விலை உயர்ந்த காரையும் வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு (Land Rover Range Rover luxury SUV) கார் மாடல் ஆகும்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டு மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த விலை உயர்ந்த கார் கொள்முதலை சிராஜ் இன்ஸ்டாகிராம் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார். தன்னுடைய ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துக் கொள்ளும் பொருட்டே அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்திருக்கின்றார்.

தொடர்ந்து, "உங்களின் கனவுகளுக்கு எல்லை இல்லை. அதுவே உங்களை கடினமாக உழைக்கச் செய்யும். கடினமாக நீங்கள் உழைத்தால் அது உங்களை முன்னோக்கி நகர்த்தும். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. என் குடும்பத்திற்காக இந்த கனவு காரை வாங்கினேன். நீங்கள் உங்களை நம்பினால், நீங்கள் விரும்பியதை அடையலாம்" என்றும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இதன் வாயிலாக சிராஜ், அனைவரையும் கனவு காணவும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். தான் இவ்வாறு செய்ததாலேயே இந்த பல கோடி ரூபாய் காரை வாங்க முடிந்திருக்கின்றது என்பதையும் இந்த பதிவின் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார் மாடலுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, திரைப் பிரபலங்கள் மத்தியில் இந்த வாகன மாடலுக்கு மிக மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, நட்சத்திர விளையாட்டு வீரர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மத்தியிலும் இந்த காருக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்துவம் விதமாக சிராஜ்-இன் இந்த கார் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இந்தியாவில் இந்த சொகுசு எஸ்யூவி கார் ரூ. 2.98 கோடி தொடங்கி ரூ. 5.2 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அதிக விலையைக் கொண்டதாக இந்த கார் மாடலின் எஸ்வி ஆட்டோபயோகிராஃபியே இருக்கின்றது. சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகள் என அனைத்திலும் வழக்கமான ரேஞ்ஜ் ரோவரைக் காட்டிலும் இதில் மிக மிக அதிகமாக இடம் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய எஸ்வி ஆட்டோபயோகிராஃபி காரையே சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் வாங்கி இருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே சிராஜ் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி-யை வாங்கி அசத்தி இருக்கின்றார். இந்த சொகுசு கார் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 394 பிஎச்பி மற்றும் 560 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. கியர்பாக்ஸை பொருத்த வரை 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் மற்றும் ஐடில்-ஸ்டாப் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 242 கிமீ ஆகும். அதேவேளையில், இதனால் வெறும் 5.8 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 வேகத்தை எட்டி விடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்த கார் மாடலின் டாப் எண்ட் தேர்வான எஸ்வி ஆட்டோபயோகிராஃபி-யில் 4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 523 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க்கை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக எஸ்வி ஆட்டோபயோகிராஃபி என்பது அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த கார் மாடல் மட்டுமல்ல, அதிக திறனை வெளியேற்றக் கூடிய சொகுசு காரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதற்கேற்ப அதன் டாப் ஸ்பீடும் உள்ளது. அது மணிக்கு 250 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும். கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஓர் உண்மையிலேயே ஓர் மிக பெரிய வாகன ஆர்வலாரக இருக்கின்றார். இதற்கு சான்றாக அவரிடத்தில் இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
அந்தவகையில், சிராஜின் கராஜில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes Benz S-Class), ஆனந்த் மஹிந்திரா பரிசளித்த மஹிந்திரா தார் (Mahindra Thar), பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் செடான் (BMW 5-Series sedan) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற உயர்தர வாகனங்களே உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் இணைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காலத்தில் பஜாஜ் பிளாட்டினா பைக்கில் சவாரி செய்து வந்தவரே சிராஜ் ஆவார். இன்று அவர் ஆடம்பர கார்களை வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றார். உண்மையில் கனவுகளுடன் உழைத்தால் என்ன மாதிரியான இலக்கை அடைய முடியும் என்பதை சிராஜின் பயணத்தின் வாயிலாக உணர முடிகின்றது. மேலும், உண்மையிலேயே இது ஊக்கமளிக்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








