கேமரா மட்டும் இல்லையென்றால் சத்தியமா கார் ஓனர் இதை நம்பியிருக்க மாட்டார்! தேவையில்லாத தண்ட செலவு!!
இன்றைய மாடர்ன் கார்களில் சன்ரூஃப் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. புதியதாக கார் வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்கள் காரில் சன்ரூஃப் இருக்கிறதா என்பதை பார்த்த பின்னரே அதனை வாங்கலாமா வேண்டாமா என்கிற யோசனைக்கே வருகின்றனர். ஆனால், நம்ம ஊர் பகுதிகளுக்கு சன்ரூஃப் தேவையான ஒன்றுதானா? என கேள்வி எழுப்பும் விதமாக வாரணாசியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கார் பாகங்கள் பிரபலமாகி உள்ளன. அந்த வகையில், சமீப காலமாக சன்ரூஃப்-ஐ மக்கள் அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதிலிலும், பனோராமிக் சன்ரூஃப் தான் வேண்டுமென்று கேட்டு காரை வாங்குகின்றனர். வழக்கமான எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ காட்டிலும் பனோராமிக் சன்ரூஃப் ஆனது நன்கு அகலமானதாக, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

காருக்குள் இருந்து பார்த்தால் வானம் தெளிவாகவும், பரந்து விரிந்தும் தெரிவதால், அதில் மயங்கும் கஸ்டமர்கள் பனோராமிக் சன்ரூஃப் உள்ள கார்களை தேடி, தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாகவே, பனோராமிக் சன்ரூஃப்-ஐ கொண்ட கார்கள் சமீப காலமாக அதிகளவில் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், காரின் உடலமைப்பிற்கு இணையாக, பனோராமிக் சன்ரூஃப் வலிமையானதா என கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.
எந்தவொரு சன்ரூஃப்-உம் காரின் உடல் வலிமைக்கு இணையாக வலிமையானது கிடையாது. கொஞ்சம் வளையும் தன்மை கொண்டவை. இதனை எல்லாரும் அறியும் வகையில், இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மரத்தில் இருந்து ஒரு குரங்கு, மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது குதித்தது. இந்த குறிப்பிட்ட கார் பனோராமிக் சன்ரூஃப்-ஐ கொண்டதாகும்.

ஆனால், இது எல்லாம் அந்த குரங்குக்கு தெரியாது என்பதால், அது காரின் மேற்கூரை என நினைத்து சன்ரூஃப் கண்ணாடி மீது குதித்தது. கொஞ்சம் உயரத்தில் இருந்து குதித்ததால், குரங்கு குதித்த உடனேயே காரின் பனோராமிக் சன்ரூஃப்-இன் பின்பகுதி உடைந்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த குரங்கு அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியாக உடைந்த சன்ரூஃப் மீது மேலும் அதன் கால்களை வைத்து அழுத்தவே, சன்ரூஃப்-இன் பாதி பகுதி முழுவதுமாக காருக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் குரங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. அது எந்தவொரு பிரச்சனையுமின்றி, காரின் மேற்கூரையில் இருந்து கீழே குதித்து அமைதியாக சென்றுவிட்டது. இந்த நிகழ்வில் காரின் பனோராமிக் சன்ரூஃப்-இன் பாதி பகுதி முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. இருப்பினும், பாதி சன்ரூஃப் நல்லப்படியாகவே உள்ளது.

இருந்தாலும், காரை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு சென்றால், முழு பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் மாற்ற வேண்டும் என்றே கூறுவர். பாதிப்புக்கு உள்ளான கார் எந்த மாடல் என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், பனோராமிக் சன்ரூஃப்-ஐ முழுவதுமாக மாற்றுவதற்கு ரூ.30,000-இல் இருந்து ரூ.1 லட்சம் வரையில் கூட செலவாகலாம்.
குரங்கு கார் மீது விழுந்ததும் பனோராமிக் சன்ரூஃப்-இன் கண்ணாடிகள் உடையும் சத்தம் ஆனது சாலையில் சென்றவர்கள் மற்றும் காருக்கு அருகே இருந்தவர்கள் உடனடியாக திரும்பும் அளவிற்கு அதிக சத்தமாக இருந்துள்ளது. பெரும்பாலானோர், குரங்கு விழுந்ததில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது என்றுதான் நினைத்திருப்பர். பின்னரே குரங்கு காரின் மேற்கூரையில் ஓரிடத்தில் தொங்குவதை பார்த்ததும், சன்ரூஃப் உடைந்துள்ளது என்பதை புரிந்துக் கொண்டிருப்பர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் ஓனருக்கு எப்படியெல்லாம் செலவு ஏற்பட்டுள்ளது என்று பாருங்கள். இந்த நிகழ்வு குறித்த வீடியோ மட்டும் கிடைக்கவில்லை என்றால், எவ்வாறு காரின் சன்ரூஃப் உடைந்தது? யாரேனும் வேண்டுமென்றே உடைத்து காருக்குள் திருட முயற்சித்தார்களா? என பல்வேறு கோணங்களில் காரின் ஓனர் தலையை பீய்த்துக் கொண்டிருப்பார். நல்லவேளையாக, சன்ரூஃப்-ஐ உடைத்த குரங்கு காருக்குள் சென்று நோட்டமிடவில்லை.


Click it and Unblock the Notifications









