தொல்லை தரும் தொழில்நுட்பங்கள்... கார் வைத்திருப்பவர்களின் கஷ்டங்கள்!
கார் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதுமை கண்டு வருகின்றது. இருந்தபோதிலும், அவற்றில் பல 'நவீன' தொழில்நுட்பங்கள் பயணிப்பவர்களுக்கோ அல்லது ஓட்டுனருக்கோ தொல்லை தரும் விஷயமாக அமைந்து விடுகிறது. இந்த விஷயத்தில் கார் நிறுவனங்கள் சற்று நிதானத்தை கடை பிடித்தால் நல்லது என்று கார் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எது அவசியம் தேவை, அது நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்ததா போன்ற அம்சங்களை கார் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் தேவையில்லாத வசதிகளை அல்லது உபகரணங்களை கார்களில் திணிக்கக்கூடாது என்று பல ஆய்வு நிறுவனங்கள் வற்புறுத்தியுள்ளன. இதுதொடர்பான ஆய்வுகளின்போது, வாடிக்கையாளர் மற்றும் உடன் பயணிப்பவரிடம் கேட்டத் தகவல்களின் அடிப்படையில், அவர்கள் தொல்லையாக கருதுவதாக தெரிவித்த சில நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் வழங்கியிருக்கிறோம்.

01. தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு
தற்போது வரும் கார்களின் டாப் வேரியண்ட்டில், ஏசியை கட்டுப்படுத்துவதற்கு தொடுதிரை வசதி கொடுக்கப்படுகிறது. ஆனால், திருகு அமைப்புதான் சிறந்ததாக இருந்ததாக பல ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், சில சமயங்களில் தொடுதிரையை துழாவும் வேளையில் கவனக்குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியிருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

02. வால்யூம் கன்ட்ரோல் பட்டன்
தற்போது மியூசிக் சிஸ்டத்தில் வால்யூமை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் மைனஸ் மற்றும் ப்ளஸ் பொத்தான்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், வால்யூம் நாப் என்று சொல்லக்கூடிய திருகு அமைப்புதான் எளிதானது என்று பலர் கருதுகின்றனர்.

03. நேவிகேஷன் சாதனம்
சில நேவிகேஷன் சிஸ்டம்களில் ஒருமுறை செல்லுமிடத்தை பதிவு செய்துவிட்டால் பின்னர் மாற்றங்கள் செய்ய முடியாது. மேலும், உடன் பயணிப்பவர்களில் சிலருக்கு எளிதாக செல்லும் வழி தெரிந்தாலும் கூட, ஓட்டுனரின் கவனம் நேவிகேஷன் சாதனம் கூறும் வழி மீது இருப்பதால், அவர்கள் எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் நேவிகேஷன் சிஸ்டமே உடன் பயணிப்பவருக்கும், ஏன் ஓட்டுனருக்கே கூட தொல்லை தரும் விஷயமாக மாறிவிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

04. சாவிக்கு பதில் சாதனம்
முன்னர் வெறும் சாவி மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஸ்மார்ட் கீ என்ற பெயரில் சில நிறுவனங்கள் கைக்கு அடக்கமான ஒரு சாதனத்தை வழங்குகின்றன. அவற்றை பாக்கெட்டில் வைப்பது சிரமம் மட்டுமின்றி, கையில் வைத்துக் கொண்டே இருக்கும் நிலை இருக்கிறது. மேலும், தொலைந்து போனாலோ அல்லது சாதனத்தில் பழுது ஏற்பட்டாலோ காரை ஸ்டார்ட் செய்வதற்கும், உள்ளே செல்வதற்கும் கடினமாகிவிடும் நிலை ஏற்படுகிறது.

05. கப் ஹோல்டர்
சில வேளைகளில் எளிதாக பயன்படுத்த முடியாத அளவிற்கும், மெல்லிய தடிமன் கொண்ட கப் ஹோல்டர்களையும் பொருத்துகின்றனர். சில கார்களில் சதுர வடிவ கப் ஹோல்டர்கள் பொருத்துகின்றனர். அது எதற்கு என்றே இதுவரை புரியவில்லை என்று பலர் கூறியிருக்கின்றனர்.

06. ஸ்டார்ட்/ஸ்டாப்
சிக்னல்களில் அல்லது குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், எஞ்சினை தானாக அணைத்துவிடும் ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம் பல கார்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. க்ளட்ச் அல்லது ஆக்சிலரேட்டரை கொடுத்தால், கார் எஞ்சின் மீண்டும் உயிர் பெற்றுவிடும். ஆனால், இந்த ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் சில வேளைகளில் எஞ்சினை ஸ்டார்ட் செய்து காரை நகர்த்துவதில் தாமதம் ஏற்படுத்துவதாக கூறியிருக்கின்றனர். பல கார்களில் இந்த தொழில்நுட்பத்தை ஓட்டுனர்கள் அணைத்து வைத்தே காரை சாதாரணமாக ஓட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

07. வாய்ஸ் கன்ட்ரோல்
வாய்மொழியாக தகவல்களை பெறுவதற்கும் அல்லது சில சாதனங்களை வாய்மொழி உத்தரவுகள் மூலமாக கட்டுப்படுத்துவதற்குமான வசதி இன்று பரவலாக பல மாடல்களில் சிறப்பான வசதியாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த வசதி சில வேளைகளில் கவனச் சிதறலையும், உடன் பயணிப்பவர்களுக்கு மிகுந்த தொல்லை தரும் விஷயமாக கூறியிருக்கின்றனர்.

08. சைடு மிரர்கள்
சில சைடு மிரர்கள் பின்புறத்தில் வரும் வாகனங்களையும், பகுதியையும் போதிய அளவு காட்டுவதில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சிறிய சைடு மிரர்கள் கொண்ட கார்களில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க முடியாமல் போகிறது என்றும் பல கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

09. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
கார்களின் சென்ட்ரல் கன்சோலில் இடம்பெறும் நேவிகேஷன், மியூசிக் சிஸ்டம் மற்றும் இதர தகவல்களை வழங்கக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் பலருக்கு குழப்பத்தை தருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது, கார் ஓட்டும்போது இயக்குவதற்கு எளிதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதில், ஒவ்வொரு வசதியையும் தேர்வு செய்து, அதில் உள் நுழைந்து சரியான இலக்கை தேர்வு செய்வதற்கு கூடுதல் கவனம் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

09. தொல்லையா, சந்தோஷமா?
உங்கள் காரில் தொல்லை தரும் தொழில்நுட்பமாக கருதுவது எது? உங்கள் கருத்துக்களையும், பிற டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








