பிரபல நடிகர்கள் ஓட்டும் பைக்குகளின் உண்மையான விலை இவ்ளோ வருதா! மயக்கம் போட்றதுக்கு முன்னாடி தாங்கி பிடிங்கப்பா
திரைத்துறையில் வருமானம் கொட்டுவதால், பல்வேறு நடிகர்கள் மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
இதில், மிக முக்கியமான நடிகர்கள் மற்றும் அவர்களின் பைக்குகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து மொழிகளின் முன்னணி நடிகர்களும் மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே பைக்குகளின் மீது மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். தமிழ் திரை உலகத்தை பொறுத்தவரையில், நடிகர் அஜீத் குமார் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

அதேபோன்று பாலிவுட் திரையுலகிலும் பைக்குகளின் மீது காதல் கொண்ட ஒரு சில முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார்? அவர்களிடம் இருக்கும் பைக்குகள் என்ன? அந்த பைக்குகளின் விலை எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஜான் ஆபிரகாம் (John Abraham)
சூப்பர்பைக்குகள் என்றவுடனே, தூம் படத்தில் ஜான் ஆபிரகாம் சுஸுகி ஹயபுசா பைக்கை ஓட்டும் காட்சிகளே நிறைய பேருக்கு நினைவிற்கு வரும். தமிழ்நாட்டில் பஜாஜ் பல்சர் பைக்குகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு, தனுஷ் நடித்த பொல்லாதவன் படமும் ஒரு காரணம் என நிறைய பேர் கூறுவார்கள். அதேபோல் இந்தியாவில் சுஸுகி ஹயபுசா பைக்குகள் பிரபலம் அடைந்ததற்கு ஜான் ஆபிரகாமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

இன்னும் சொல்லப்போனால் ஜான் ஆபிரகாமை பற்றி குறிப்பிடாமல் இந்த செய்தியை நிறைவு செய்யவே முடியாது. ஏனெனில் அவர் பைக் காதலர் அல்ல. பைக் வெறியர். சினிமாவை போல், நிஜ வாழ்க்கையிலும் பைக்குகள் என்றால் ஜான் ஆபிரகாமிற்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் 16க்கும் மேற்பட்ட பைக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக் கலெக்ஸனில் சுஸுகி ஹயபுசா மற்றும் யமஹா ஆர்1 போன்ற பைக்குகளும் அடங்குகின்றன. ஜான் ஆபிரகாமிடம் உள்ள பைக்குகளை பற்றி மட்டுமே தனியாக ஒரு செய்தியை எழுத முடியும். ஆனால் இந்த செய்தியில் ஜான் ஆபிரகாமிடம் உள்ள ஒரு விலை உயர்ந்த பைக் பற்றிய தகவல்களை மட்டும் பார்க்கலாம்.

ஜான் ஆபிரகாமிடம் இருக்க கூடிய விலை உயர்ந்த உடைமைகளில் ஒன்றாக டுகாட்டி பனிகேல் வி4 (Ducati Panigale V4) பைக் திகழ்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக்கின் ஆரம்ப விலையே 23.50 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக் டாப் வேரியண்ட்டின் விலை 28.40 லட்ச ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த டுகாட்டி பனிகேல் வி4 பைக்கில், 1.1 லிட்டர் (1,103 சிசி) நான்கு-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 215 ஹெச்பி பவரையும், 123 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கான் (Salman Khan)
அதிவேகத்தில் செல்லும் பைக்குகள் மீதான சல்மான் கானின் காதல் உலகத்திற்கே தெரியும். மும்பை நகரின் சாலைகளில் பலமுறை அவர் தனது சூப்பர்பைக்குகளை ஓட்டி வந்துள்ளார். சல்மான் கானிடம் யமஹா ஆர்1 (Yamaha R1) பைக் இருக்கிறது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையே 21 லட்ச ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக இருக்கும்.

சல்மான் கான் சொந்தமாக வைத்திருக்கும் யமஹா ஆர்1 பைக்கில், 998 சிசி இன்லைன் நான்கு-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 179 ஹெச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் மின்னலை போன்று சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வல்லமை வாய்ந்தது.

அக்ஸய் குமார் (Akshay Kumar)
அக்ஸய் குமாரிடம் பல்வேறு பைக்குகள் இருக்கின்றன. இதில் யமஹா விமேக்ஸ் (Yamaha Vmax) பைக்கும் ஒன்றாகும். இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 28 லட்ச ரூபாய் ஆகும். இந்த பைக்கில் 1,679 சிசி வி4 லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 200 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 167 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அக்ஸய் குமார் வைத்துள்ள யமஹா விமேக்ஸ் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 220 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைத்து கொண்டுள்ள பல்வேறு கார்களை காட்டிலும், இந்த யமஹா விமேக்ஸ் பைக் அதிக சக்தி வாய்ந்தது. இதுவே யமஹா விமேக்ஸ் பைக்கில், அக்ஸய் குமாரை மிகவும் கவர்ந்த விஷயம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications