ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இவ்ளோ ரூபாயா! இதுக்கு இந்தியாவே பரவால என நினைக்க வைக்கும் நாடுகளின் லிஸ்ட்!
இந்தியாவே பரவாயில்லை என நினைக்க வைக்கும் அளவிற்கு மிகவும் அதிகமான விலையில் பெட்ரோல் விற்பனையாகி கொண்டுள்ள நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் மிகவும் அதிகமான விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. வரி விதிப்பு முறைகள் மாறுபடுவதால், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவை போலவே இன்னும் பல்வேறு நாடுகளின் மக்களும் ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்குவதற்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவழிக்கின்றனர். இந்த செய்தியில், உலகில் மிகவும் அதிகமான விலையில் பெட்ரோலை விற்பனை செய்து வரும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.

ஹாங்காங்
சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமாக ஹாங்காங் இருக்கிறது. ஹாங்காங்கின் கழுத்தை சீனா இறுக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்குவதற்கு நாம் செலவழிக்கும் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகையை ஹாங்காங்கில் செலவழிக்க வேண்டியுள்ளது.

ஆம், அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 242.5 ரூபாய் ஆகும். ஹாங்காங் எவ்வளவு காஸ்ட்லியான பகுதி என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். உலகிலேயே பெட்ரோல் மிகவும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் ஹாங்காங் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து
உலகில் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்றாக ஐஸ்லாந்து உள்ளது. எனவே ஐஸ்லாந்து பகுதியில் எந்தவொரு பொருளை வினியோகம் செய்வது என்றாலும், அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். பெட்ரோலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே ஐஸ்லாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 186.7 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய ஆப்ரிக்க குடியரசு
மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை. அத்துடன் உள்நாட்டு போர்களாலும் இந்த நாடு மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு பெட்ரோலின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு லிட்டர் பெட்ரோல் 185.8 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது.

நார்வே
ஐஸ்லாந்தை போலவே, நார்வேயும் குளிரான நாடுகளில் ஒன்றுதான். அங்கு நிலவும் கடுமையான குளிர் பொருட்களின் போக்குவரத்தை கடினமான ஒரு காரியமாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக நார்வே நாட்டில் பெட்ரோலின் விலை அதிகமாக உள்ளது. நார்வேயில் ஒரு லிட்டர் பெட்ரோல் 177.6 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது.

ஆனால் நார்வேயில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து கொண்டு வருகிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எப்படி மாற வேண்டும்? என்பதை, உலகிற்கே பாடம் நடத்தும் அளவிற்கு நார்வே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டென்மார்க்
ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளை போன்று டென்மார்க்கும் குளிரான நாடுதான். அத்துடன் மக்கள் அடர்த்தியை அதிகமாக கொண்ட நாடாகவும் டென்மார்க் இருக்கிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 170.8 ரூபாய் ஆகும். இதேபோல் இன்னும் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவை விட அதிகமான விலையில் பெட்ரோல் விற்பனையாகி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








