காரில் குழந்தைகளை ஏத்தணும்னா இனி இந்த பொருள் கட்டாயம்... வந்தன புதிய விதிமுறைகள் - இல்லைனா அபராதம் தான்!!
கார்களிலும், மற்ற வாகனங்களிலும் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை இந்திய மோட்டார் வாகன துறை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி மிக வேகமாக அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் வாகனங்கள் பாதுகாப்பு மிக்கவைகளாக மாறி வருகின்றன. குறிப்பாக, பரவலாக மக்கள் பலரால் பயன்படுத்தப்படும் கார்கள் தானாக இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேறி விட்டன. அடாஸ் போன்ற அதிநவீன தொழிற்நுட்பங்களால் இயந்திர கோளாறால் கார் விபத்துகள் நடைபெறுவது மிக மிக குறைந்துவிட்டது.

கார்களில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, இயங்க ஆரம்பித்த உடன் காரின் கதவுகள் தானாக மூடி கொள்வது, குழந்தைகளுக்கான இருக்கை போன்றவை வழங்கப்படுகின்றன. இருப்பினும், கார்களில் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கேரள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி பார்க்கும்போது, காரில் குழந்தைகள் பிரத்யேகமாக உருவாக்கப்படும் குழந்தை இருக்கையில் மட்டுமே உட்கார வைக்கப்பட வேண்டும். அத்துடன் சீட் பெல்ட்டையும் அணிந்திருக்க வேண்டும். இந்த வழிமுறைகளை மோட்டார் வாகன சட்டத்தில் கட்டாயமாக பின்பற்ற போலீஸார் முடிவெடுத்துள்ளனர். இதற்காக தனது துறையின் அதிகாரிகளை மோட்டார் வாகன துறை முடுக்கிவிட்டுள்ளது.

ஆதலால், இந்த இரு வழிமுறைகளை கார் ஓட்டிகள் இனி கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறையின் படி, 2 வயதுக்குள்ளான கை குழந்தைகளை கட்டாயம் குழந்தை இருக்கையில் மட்டுமே அமர்த்த வேண்டும். இந்த வழிமுறைகள் உடன் மேலும் சிலவற்றையும் கேரள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அவையாவன, கை குழந்தைகள் உள்ள கார்களில் முன் கண்ணாடியில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியும் விதத்தில் 'காரில் குழந்தை உள்ளது' (Child on Board) பலகை வைக்க வேண்டும் மற்றும் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காரின் முன் இருக்கையில் அமர்த்தக்கூடாது என்பன ஆகும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, மோட்டார் வாகன சட்டம் & விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

வாகன ஓட்டுனர்கள் அனைவரும் தங்கள் வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், சாத்தியமான விபத்துகள் & தீங்குகளை தடுக்க இந்த வழிக்காட்டுதல்களை பின்பற்றுமாறும் கேரள குழந்தை உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பெற்ற கேமிராக்கள் மூலமாக தெரியவந்த விதிமீறல்களின் அடிப்படையில் மோட்டார் வாகன துறையினர் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க துவங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உண்மையில் இத்தகைய சட்டங்களை அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே கட்டாயமாக்கி விட்டன. இந்த வரிசையில் விரைவில் நமது இந்தியாவும் இணைகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு பிரத்யேக இருக்கை என்பது மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஏனெனில் கை குழந்தைகள் எளிதில் காயத்தை சந்தித்து விடுவர். அத்துடன் குழந்தைகளுக்கு ஏற்படும் உள்காயங்களை அந்த நேரத்தில் நம்மால் அறிய முடியாமலும் போகலாம்.


Click it and Unblock the Notifications
