இந்த மாதிரி ஆபீசரா பாத்து வேலைக்கு எடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்! மத்தவங்க எல்லாம் இவரை பாத்து கத்துக்கணும்!
இந்தியாவில் அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் கனிவாக பேசுவது என்பதெல்லாம் சினிமாவில் கூட நடக்காத விஷயமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் பலர், பொதுமக்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கின்றனர். காவல் துறை அதிகாரிகள், பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது கூட, சாதாரணமாக நடக்க கூடிய ஒரு விஷயமாக இருப்பது வேதனையான உண்மை. வாகன தணிக்கையின்போது, காவல் துறையிடம் நீங்கள் சிக்கி விட்டாலோ அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல நேரிட்டாலோ, மனதை திடப்படுத்தி கொள்வது நல்லது.
ஏனெனில் இந்த சமயங்களில் எல்லாம் பொதுமக்கள் மோசமான அனுபவங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன் கணிசமான தொகையையும் காவல் துறை அதிகாரிகளிடம், லஞ்சமாக இழக்க வேண்டியது வரலாம். நிலைமை இப்படி இருக்கும்போது, அதிகாரி ஒருவர், வாகன ஓட்டிகளிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், மோட்டார் வாகன துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம், ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சிக்கி கொள்வதை நம்மால் காண முடிகிறது. அவர் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வாடிக்கையாளர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை ஓட்டி கொண்டு வந்தபோது, மோட்டார் வாகன துறை அதிகாரியிடம் அவர் சிக்கி கொண்டார்.
பொதுவாக இது போன்ற சமயங்களில், அதிகாரிகள் பலர் தகாத வார்த்தைகளால் பொதுமக்களை திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள மோட்டார் வாகன துறை அதிகாரியோ, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டதை நாம் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும்? என்பதை அவர் மிகவும் கனிவாக அவருக்கு எடுத்துரைக்கிறார். ஹெல்மெட் அணியாவிட்டால் உடலின் மிக முக்கிய உறுப்பான மூளை பாதிக்கப்படலாம் என்பதையும் அவர் நிதானமாக எடுத்து கூறுகிறார். அத்துடன் காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிவது அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
அத்துடன் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலருக்கு ஹெல்மெட்டை எப்படி சரியாக அணிய வேண்டும்? என்பதையும் அவர் கற்று கொடுத்துள்ளார். சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் நாம் காணும் அதிகாரி, கேரள மோட்டார் வாகன துறையை சேர்ந்தவர் ஆவார். இந்த வைரல் வீடியோ திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் நமக்கு தெரியவரவில்லை. இருப்பினும் சமூக வலை தளங்களில் இந்த மோட்டார் வாகன துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மற்ற அதிகாரிகளும் இவரை போல் கனிவாக நடந்து கொண்டால், பொதுமக்களுக்கு பிரச்னையே இருக்காது என நெட்சடின்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையிலேயே இது போன்ற அதிகாரிகளை பார்ப்பது என்பது சற்று ஆச்சரியமாகதான் உள்ளது. ஆனால் ஒரு சில நல்ல அரசு அதிகாரிகளும் இருக்கவே செய்கின்றனர். அதற்கு இந்த நபர் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஏனெனில் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பாக ஒரு சில சமயங்களில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளிடம், காவல் துறை அதிகாரிகள் மிரட்டும் தொனியில் கூறாமல், மன்றாடி கேட்டு கொண்ட சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. அத்துடன் வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூக்களை வழங்குவது போன்ற செயல்களையும் கூட ஒரு சில காவல் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








