போன வருஷத்தவிட இந்த வருஷம் கலெக்சன் அதிகம்.. வாகனங்களுக்காக சாலை வரியாக மட்டும் இவ்ளோ வசூலிச்சிருக்காங்களா?..
இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஆட்டோமொபைல்ஸ்துறை இருக்கின்றது. இந்த நிலையிலேயே வாகனங்களுக்காக வசூலிக்கப்படும் சாலை வரியானது கடந்த நவம்பர் மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations, India) வெளியிட்டு இருக்கும் தகவலின் வாயிலாகவே இது தெரிய வந்திருக்கின்றது. 2023 நவம்பர் மாதத்தில் அரசுக்கு வாகனங்களுக்கான சாலை வரியாக ரூ. 7,540 கோடி மட்டுமே கிடைத்த நிலையில், அது, 2024 நவம்பர் மாதத்தில் சற்றே அதிகரித்து ரூ. 7,589 கோடியாக உயர்ந்திருக்கின்றது.
இது 0.7 சதவீதம் அதிக வரி வசூல் ஆகும். இதன் வாயிலாக அரசுக்கு கூடுதலாக சென்ற மாதத்தில் வருமானம் கிடைத்திருப்பது தெரிய வந்து உள்ளது. அதேவேளையில், இது கடந்த 2024 அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் மிகக் குறைவான வரி வசூல் ஆகும்.

2024 அக்டோபர் மாதத்தில் 9,707 கோடி ரூபாய் வரை மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியாக அரசுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால், 2024 நவம்பரில் கிடைத்திருப்பது 21.8 சதவீதம் குறைவான வரி வசூலே ஆகும். ஆகையால், அரசுக்கு ஆண்டு -டூ- ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக வரியும், மாதத்தில் இருந்து மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வரியையே பெற்றிருக்கின்றது என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
2024 அக்டோபர் மாதத்தில் வரி வசூல் அதிகமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமாக பண்டிகைக் காலம் என்பதால் பலர் அந்த மாதத்தில் அதிக அளவில் புதிய வாகனங்களை வாங்கினர் இதன் விளைவாகவே அக்டோபரில் அரசுக்கும் புதிய வாகனங்களால் கிடைக்கும் சாலை வரியும் அதிகரித்துக் காணப்பட்டு இருக்கின்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் சலுகைகளை வாரி வழங்கியதே மக்கள் அதிக அளவில் புதிய வாகனங்களை வாங்க காரணமாக இருக்கின்றது. முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் வரை என அனைவரும் சலுகைகளை வாரி வழங்கினர்.
முக்கியமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சிறப்பு சலுகையாக தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாபெரும் சலுகையை அறிவித்தது. குறிப்பாக, 'பிக்கஸ்ட் ஓலா சீசன் சேல்' ( Biggest Ola Season Sale) மற்றும் 'பாஸ் 72 ஹவர் ரஷ்' (BOSS 72-hour Rush) போன்ற திட்டங்களை அறிவித்து ஒட்டுமொத்த டூ-வீலர் காதலர்களையும் தன் வசம் இழுத்துப் போட்டுக் கொண்டது.
இதன் விளைவாக மாபெரும் விற்பனை வளர்ச்சியை அது 2024 அக்டோபரில் பெற்றது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனையாகின. இந்த பிராண்டு மட்டும் இல்லைங்க 2024 அக்டோபர் மாதத்தில் முன்னணி நிறுவனங்கள் பல மாபெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்தன.
இதன் தொடர்ச்சியாகவே அரசுக்கு மோட்டார் வாகனங்கள் வாயிலாக கிடைக்கும் சாலை வரியும் 2024 அக்டோபரில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. ஆனால், இந்த நிலை போன நவம்பரில் தொடரவில்லை. இருப்பினும், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது நல்ல வரி வசூல் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைக்கு என மிகப் பெரிய அளவில் வரி வசூல் செய்யப்பட்டாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் என்னமோ குண்டும் குழியுமாகவே இருக்கின்றது. சொல்லப்போனால் சில முக்கிய நகரங்களுக்கே ஆஃப்-ரோடு மாதிரியான சாலைகளில் பயணிக்க வேண்டிய சூழலே இப்போதும் உள்ளது. இதுபோக டோல்கேட்டுகள் வாயிலாகவும் வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஆண்டுக்கு ஆண்டுக்கு சாலைக்கான டேக் கலெக்சன் அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








