திடுதிப்புனு சட்டத்தை மாத்தீட்டாங்க! இனி அடுத்த தெருவுக்கு போக வண்டிய எடுக்கறதுனா கூட 10 தடவை யோசிக்கணும்!
இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. உரிய வயதை எட்டுவதற்கு முன்பே வாகனங்களை ஓட்டும் சிறார்களும், சிறுமிகளும் இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளனர். இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் (Driving License) வழங்கப்படும். 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் இந்த விதிமுறையை பொருட்படுத்துவதே கிடையாது. சாலைகளில் சிறார்களும், சிறுமிகளும் வாகனங்களை ஓட்டுவதை நீங்கள் கண் கூடாக பார்க்கலாம்.

டூவீலர்கள் மட்டுமல்லாது, கார் போன்ற பெரிய வாகனங்களையும் கூட, உரிய வயதை எட்டுவதற்கு முன்பே அவர்கள் ஓட்டுகின்றனர். இது சாலை விபத்துக்களுக்கு காரணமாகிறது. எனவே சிறார்களும், சிறுமிகளும் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மோட்டார் வாகன சட்டம் 1988-ல், மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது அதிரடியாக ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. சிறார்களும், சிறுமிகளும் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு வாகனங்களை ஓட்டுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம், இனி சிறார்களும், சிறுமிகளும் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு வாகனங்களை ஓட்டினால், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் (Fine) விதிக்க முடியும். பெற்றோர்கள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும். இதுதவிர இந்த சட்ட திருத்தத்தில் மற்றொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது.
அதாவது 18 வயது நிரம்புவதற்கு முன்பாக வாகனங்களை ஓட்டி பிடிபடும் சிறார்களும், சிறுமிகளும், 25 வயது வரை டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாது. எனவே அவர்கள் 18 வயது நிரம்பினாலும் கூட, டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு கூடுதலாக 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அபராத தொகை அதிகமாக இருப்பதாலும், 25 வயது வரை டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாது என்பதாலும், சிறார்களையும், சிறுமிகளையும் வாகன ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என மஹாராஷ்டிரா அரசு கருதுகிறது. எனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த சட்ட திருத்தம் உதவும் என அரசு நம்புகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு என்னதான் சட்டங்களை அமல்படுத்தினாலும், பொதுமக்களாகிய நாமாக பார்த்து தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. எனவே சிறு வயதிலேயே வாகனம் ஓட்டுவது பெருமை என கருதாமல், டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகே வாகனங்களை இயக்க குழந்தைகளை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








