பட டைரக்டருக்கு பரிசா கார் கொடுக்க முடியல என்றாலும், அந்த மனசுதாங்க முக்கியம்!! 2.5 இலட்ச ரூபாய் பைக்!
மலையாள சினிமாவில், திரைப்படம் வெற்றி அடைந்ததற்காக படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். பரிசாக கிடைத்துள்ள பைக்கை இயக்குனர் தனது குடும்பத்துடன் வந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் வெற்றி பெற்றால், அந்த படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்குவது சமீப காலமாக ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. இந்த டிரெண்ட் பாலிவுட்டில்தான் துவங்கியது என்றாலும், நம் கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாக இதனை நிறைய பேர் பின்பற்றி வருகின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், விக்ரம் பட பிரம்மாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அந்த படத்தில் நடித்த நடிகர் கமலஹாசன் பரிசாக வால்வோ கார் ஒன்றை வழங்கியது இணையத்தில் பயங்கர வைரலாகியது. இந்த டிரெண்ட் தற்போது மலையாள மோலிவுட் சினிமாவிலும் நுழைந்துள்ளது.
கருடன் திரைப்படம் வெற்றிப் பெற்றதை அடுத்து படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கியா செல்டோஸ் காரை பரிசாக சமீபத்தில் வழங்கி இருந்தார். அந்த வரிசையில், 'பழஞ்சன் பிராணாயாமம்' திரைப்பட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் படத்தின் இயக்குனருக்கு ராயல் என்ஃபீல்டின் பிரபலமான கிளாசிக் 350 பைக்கை பரிசாக வழங்கி உள்ளார்.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வந்த பழஞ்சன் பிராணாயாமம் திரைப்படம் 25 நாட்களை கடந்து 50 நாட்களை நோக்கி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படமான இதில் வின்சி அலோஷியஸ் மற்றும் ரோனி டேவிட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பினீஸ் களரிகள் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை இதிஹாசா மூவிஸ் தயாரித்துள்ளது. கேரளாவில் இந்த திரைப்படம் நல்ல வெற்றியடைந்து உள்ளதால், இதிஹாசா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் வைசக் ரவி மற்றும் ஸ்டான்லி ஜோஷ்வா இருவரும் இணைந்து ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கை படத்தின் இயக்குனர் பினீஸ் களரிகளுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பினீஸ் களரிகள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை படங்களுடன் பதிவிட்டுள்ளார். இவர் பரிசாக பெற்றுள்ள கிளாசிக் 350 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய பைக்காக இது விளங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கை சிங்கிள் டெசர்ட் சாண்ட் பெயிண்ட் ஆப்ஷனில் இயக்குனருக்கு பரிசாக இதிஹாசா மூவிஸ் தயாரிப்பாளர்கள் வழங்கியுள்ளனர். இந்தியாவில் கிளாசிக் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.93 இலட்சத்தில் இருந்து ரூ.2.25 இலட்சம் வரையில் உள்ளன. இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் எடை 195 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 13 லிட்டர்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டில் அதன் கிளாசிக் 350 பைக்கை நியூ ஜென்ரேஷனுக்கு அப்டேட் செய்து இருந்தது. இந்த வகையில் பார்த்தால், மார்க்கெட்டில் புத்துணர்ச்சியான தோற்றத்திலேயே கிளாசிக் 350 பைக் உள்ளது. ஒருவருக்கு பரிசாக வழங்குவதற்கு இது ஏற்ற மோட்டார்சைக்கிளே ஆகும்.


Click it and Unblock the Notifications









