புதுசு மாதிரி மாத்தீட்டாங்க! இந்த யமஹா ஆர்டி350 பைக் அவரோடதா! பெட்ரோல் டேங்க் மேல 'அந்த' நம்பரை பாருங்க!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் மறக்க முடியாத பைக்குகளில் ஒன்று யமஹா ஆர்டி350 (Yamaha RD350). இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 350 சிசி, 2 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் மிகவும் பிரபலம். யமஹா ஆர்டி350 பைக்கின் இதயமான இந்த இன்ஜின், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடியது.
இதன் காரணமாக இன்றளவும் கூட யமஹா ஆர்டி350 பைக்கிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி (MS Dhoni) கூட, யமஹா ஆர்டி350 பைக்கின் ரசிகர்தான்!

இந்திய அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, எம்எஸ் டோனி இன்னமும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். வாகனங்கள் மீதான காதலும் இதற்கு ஒரு காரணம். எம்எஸ் டோனி புதிய வாகனங்களை வாங்கியது தொடர்பான செய்திகளையும், வாகனங்களில் வலம் வந்தது தொடர்பான செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் அதிகமாக படித்திருக்கலாம்.
இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய வாகனத்தை எம்எஸ் டோனி வாங்கியுள்ளார். இந்த செய்தியின் ஆரம்பத்தில் நாங்கள் குறிப்பிட்ட யமஹா ஆர்டி350 பைக்தான் எம்எஸ் டோனி வாங்கிய புதிய வாகனம் ஆகும். எம்எஸ் டோனியிடம் ஏற்கனவே யமஹா ஆர்டி350 பைக் இருக்கிறது.

ஆனால் யமஹா ஆர்டி350 பைக் என்றால், எம்எஸ் டோனிக்கு மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே மேலும் ஒரு யமஹா ஆர்டி350 பைக்கை எம்எஸ் டோனி தற்போது வாங்கியுள்ளார். சண்டிகர் (Chandigarh) பகுதியில் இயங்கி வரும் ப்ளூ ஸ்மோக் கஸ்டம்ஸ் (Blue Smoke Customs) என்ற நிறுவனம்தான், இந்த யமஹா ஆர்டி350 பைக்கை புதிது போல் மாற்றி எம்எஸ் டோனிக்கு டெலிவரி செய்துள்ளது.
எம்எஸ் டோனியின் இளமை பருவத்தில், அவரது முதல் பைக்காக இருந்தது யமஹா ஆர்டி350-தான்! இதன் காரணமாகவே இன்றளவும் யமஹா ஆர்டி350 பைக் மீதான காதல் அவருக்கு கொஞ்சம் கூட குறையவில்லை. எம்எஸ் டோனி தற்போது வாங்கியுள்ள யமஹா ஆர்டி350 பைக், பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் எரிபொருள் டேங்க்கின் மேலே '7' என்ற எண் எழுதப்பட்டுள்ளது. இது டோனியின் ஜெர்சி நம்பர் ஆகும். ப்ளூ ஸ்மோக் கஸ்டம்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எம்எஸ் டோனிக்கு டெலிவரி செய்யப்பட்ட யமஹா ஆர்டி350 பைக்கின் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவை தற்போது வைரல் ஆக பரவி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்எஸ் டோனி திடீர் திடீரென பைக் மற்றும் கார்களில் சாதாரண மக்களை போல் சாலைகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார். அதேபோல் அவர் தற்போது புதிதாக வாங்கியுள்ள யமஹா ஆர்டி350 பைக்கிலும் வலம் வர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.


Click it and Unblock the Notifications








