எல்லாரும் பார்த்து வாய் பிளக்க எலக்ட்ரிக் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கிய முகேஷ் அம்பானி! மும்பை சாலையை கலக்குது!!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இந்தியாவின் பெரும் தொழிலதிபர் என்பதை நான் கூற வேண்டியதில்லை. இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் டாப்-10 பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் முகேஷ் அம்பானி ஓர் ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம். இவரிடம் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. குறிப்பாக, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார்கள் மூன்றை முகேஷ் அம்பானி வைத்துள்ளார். இந்த நிலையில், முகேஷ் அம்பானி தனது முதல் ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கியுள்ளதாக போட்டோ உடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டிஷ் (British) நாட்டை சேர்ந்த அல்ட்ரா-லக்சரி (Ultra-Luxury) கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் 120 ஆண்டுகால வரலாற்றை கொண்டது ஆகும். இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது; இந்தியாவிலும் தான். நம் நாட்டில் செல்வந்தர்கள் பலரிடம் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. பணக்காரர்களே வாங்க துடிக்கும் கார் என்றால் அது ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் ஆகும்.

இத்தகைய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு தனது முதல் எலக்ட்ரிக் காரை கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதுதான், ஸ்பெக்டர் (Spectre) ஆகும். உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் கார்களுக்கு மத்தியில் தேவை அதிகரித்துவருவது என்னமோ உண்மைதான். இருப்பினும், பல கோடி ரூபாய் செலவில் கார்களை பார்த்து, பார்த்து உருவாக்கும் தனக்கு எலக்ட்ரிக் கார்கள் எந்த அளவிற்கு சரிப்பட்டுவரும் என்பதை ரோல்ஸ்-ராய்ஸ் மிகவும் யோசித்த பின்னரே தனது ஸ்பெக்டர் காரை அறிமுகம் செய்தது.
ரோல்ஸ்-ராய்ஸின் இந்த முதல் எலக்ட்ரிக் காரை தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வெள்ளை நிறத்திலான ஸ்பெக்டர் கார் ஒன்று இந்தியாவில் சிக்னலில் மற்ற வாகனங்கள் உடன் நிற்கும் போட்டோவை பதிவிட்டு, இது முகேஷ் அம்பானியின் கார் என இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டா பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒருவர், முகேஷ் அம்பானி வி12 என்ஜின் கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிவிட்டாரா? என கேள்வி எழுப்பும் வகையில் கமெண்ட் செய்துள்ளார். ஆனால், உண்மையில் இது முகேஷ் அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் கார் தானா என்பது உறுதியாக தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் '0001' என்கிற ஃபேன்சி எண்ணுடன் மஹாராஷ்டிரா மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, மும்பையில் '001' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை முகேஷ் அம்பானியின் லக்சரி கார்களில் தான் அதிகமாக காண முடிகிறது. 2022இல் இவர் வாங்கிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் வெறும் '1' என்கிற ஆர்டிஓ பதிவெண் உள்ளது. இந்த கல்லீனன் காருக்காக ரூ.1 கோடியில் பெயிண்ட் வொர்க் செய்யப்பட்டது.
இந்த ஒரு கல்லீனன் கார் மட்டுமின்றி, தன்னிடம் உள்ள அனைத்து கல்லீனன் காரிலும் '1' என்கிற வாகன பதிவெண்ணை முகேஷ் அம்பானி கொண்டுள்ளார். ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், இந்தியாவில் இந்த கார் கடந்த 2024 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு 1.5 வருடங்கள் கழித்தே இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.7.5 கோடியில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி விளங்குகிறது. இதில் 102kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 195 கிலோவாட்ஸுக்கு அதிகமான திறன் கொண்ட சார்ஜரில் இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 34 நிமிடங்களில் சார்ஜ் நிரப்பிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயம் கிடையாது. இருப்பினும், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் காரை உண்மையில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை. முகேஷ் அம்பானி அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது இந்த ஸ்பெக்டர் இவி காரில் சென்றால்தான் அதனை உறுதிப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








