சீனாவை அண்ணாந்து பார்த்தது போதும்... இது இந்தியானு சொன்னால் நம்ப முடிகிறதா? கட்டணம் எவ்வளவா இருக்கும்?
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்ப சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கார்களின் பயன்பாடு நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் கார்களை பார்க்கிங் செய்வது என்பது பெரிய சவாலான விஷயமாக மாறி வருகிறது. விலையுயர்ந்த காரை கூட வாங்க முடிகிறது; ஆனால் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் இல்லை என்பதினாலேயே நிறைய பேர் கார் வாங்கும் ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்து விடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இந்த பார்க்கிங் பிரச்சனை நம் இந்தியாவில் மட்டுமில்லை, அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் கூட பெரிய பிரச்சனை ஆக உள்ளது. இன்னும் சொல்லப் போனால், அமெரிக்காவில் சில மாகாணங்களில் புதியதாக கார் வாங்க வேண்டும் என்றால், அதனை நிறுத்தி வைப்பதற்கான பார்க்கிங் ஏரியாவை காட்டினால்தான் கார் வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

அத்தகைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. நம் நாட்டில் கார் பார்க்கிங் பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டறிய இப்போதே ஆரம்பித்து விட்டனர். இதற்கு உதாரணமாக, பெங்களூருவில் இருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், பெங்களூரில் செயல்படும் ஒரு பிரமாண்டமான கார் பார்க்கிங் இயந்திரம் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு, பெரிய இயந்திரங்கள் மூலமாக குறுகிய இடத்திற்குள் நிறைய கார்களை நிறுத்தி வைக்கும் தொழிற்நுட்பவியல் ஆனது சில வெளிநாடுகளில் கடந்த பல வருடங்களாக செயல்பாட்டில் உள்ளது. குறிப்பாக, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வேகமாக அதிகரித்துவரும் கார்களின் எண்ணிக்கையை சமாளிக்கும் விதமாக இவ்வாறான பார்க்கிங் இயந்திரங்களை பரவலாக நிறைய இடங்களில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இவ்வாறான இயந்திரங்கள் நம் இந்தியாவிற்கு மிகவும் புதுமையானவை ஆகும். அப்படியிருந்தும், பெங்களூருவில் ஒரு கோவில் (Temple)-இல் இவ்வாறான பிரம்மாண்ட கார் பார்க்கிங் இயந்திரம் பயன்படுத்தப்படுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கியா செல்டோஸ் (Kia Seltos) கார் ஓட்டி ஒருவர் இந்த பார்க்கிங் இயந்திரத்தை பயன்படுத்துவது காட்டப்பட்டு உள்ளது.
இந்த இயந்திரத்தில் இரு அடுக்குகளாக கார்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராட்டினம் போன்று செயல்படும் இவ்வாறான பார்க்கிங் இயந்திரம் ஆனது பல வெளிகளில் பயன்பாட்டில் உள்ளன. நம் இந்தியாவில் கூட சில பகுதிகளில், வெவ்வேறான அளவுகளில் உள்ளது. இருப்பினும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கார்களை நிறுத்துவதற்காக இவ்வாறான அதிநவீன பார்க்கிங் இயந்திரம் பயன்படுத்துவதை இதற்குமுன் எங்கேயும் பார்த்தது இல்லை.

இந்த பார்க்கிங் இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது. உங்களது காரை நிறுத்துவதற்கான அடுக்கை தரைக்கு கொண்டுவருவர், அதில் உங்களது காரை பத்திரமாக கொண்டுப்போய் நிறுத்தினாலே போதும். காரை சரியாக நிறுத்திவிட்டு, டிரைவர் வெளியே வந்துவிட வேண்டும். பின்னர், உங்களுக்கு அடுத்து வந்தவரின் காரை நிறுத்துவதற்கான அடுக்கு மேல் இருந்து தரைக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு சுழற்சி முறையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, பார்க்கிங் பகுதியை மிச்சப்படுத்தலாம். இந்த இயந்திரத்தை ஓட்டுவதற்காக என்றே தனியாக ஒரு நபர் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். சில நாடுகளில் இவ்வாறான பார்க்கிங் இயந்திரங்கள் முற்றிலுமாக ஆட்டோமேட்டிக்காக இயங்கக் கூடியவைகளாகவும் உள்ளன. பெங்களூருவில் ஒரு கோயிலுக்கு அருகே அமைந்துள்ள இந்த பார்க்கிங் இயந்திரம் ஆனது ஒரு தனியார் நிறுவனத்தால், கட்டணத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான பார்க்கிங் பகுதிகளினால், நிறைய இடங்கள் மிச்சமாகுவது மட்டுமின்றி, காரை சரியான இடத்தில் கஷ்டப்பட்டு பார்க் செய்ய வேண்டிய தேவையும் தவிர்க்கப்படுகிறது. வருங்காலங்களில் இவ்வாறான இயந்திரங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களில் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு ஆரம்பமாகவே, பெங்களூருவில் பயன்படுத்தப்படும் இந்த கார் பார்க்கிங் இயந்திரத்தை பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









