பாதுகாப்ப பலப்படுத்துங்க... தண்டவாளம் பக்கத்துல யாரும் வந்தர கூடாது... இனி வந்தே பாரத் இவ்ளோ வேகத்தில் போகுமா!
இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மும்பை-அகமதாபாத் (Mumbai-Ahmedabad) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்றாகும். மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் மும்பை மற்றும் குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது.
தற்போதைய நிலையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சீறி பாயவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி சோதனை செய்வதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள் வரை குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சோதனை ஓட்டத்தை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் விதித்துள்ளனர். இதன்படி சூரிய வெளிச்சம் இருக்கும் சமயத்தில் மட்டுமே இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வானிலை சாதகமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்போது அனைத்து லெவல் கிராஸிங் கேட்களிலும், ரயில்வே பாதுகாப்பு படையை (Railway Protection Force) சேர்ந்தவர்கள், பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் உள்ளே வந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் பணி.

இதுதவிர இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்போது, மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன்களை இந்த வந்தே பாரத் ரயில் அதிவேகத்தில் கடக்கும். அப்போது பிளாட்பார்ம்களுக்கு நெருக்கமாக யாரும் வந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பிளாட்பார்ம்களில் இருந்து பயணிகள் பாதுகாப்பான இடைவெளிகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள், பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் இந்த சோதனை ஓட்டத்தின்போது பணியில் ஈடுபடவுள்ள லோகோ பைலட்களுக்கு போதுமான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர அவர்களின் உடல் நிலையும் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதில் தேர்ச்சி அடைந்தால் மட்டும்தான், அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த சோதனை ஓட்டத்தை எப்போது நடத்துவது? என்ற தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த சோதனை ஓட்டத்தை நடத்துவதற்கான தடையில்லாத சான்றிதழ் மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த சோதனை ஓட்டத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படவிருப்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும். பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள் வரை குறையும் என்பதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இதை இந்திய ரயில்வே படிப்படியாக நடைமுறைப்படுத்தும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இதன் முதற்கட்டமாக பெங்களூர்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








