ஒரே ஒரு ஆட்டோ மூலம் மாசத்துக்கு 8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்! விட்டா அம்பானியையே தூக்கி சாப்பிட்றுவாரு!

ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். ஆட்டோ டிரைவர்களின் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனைகளை படைத்திருப்பார்கள். வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் என்பதால், அவர்களை பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

அதேபோல் அரசு பணி தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் கூட, ஆட்டோ டிரைவர்களின் மகன் அல்லது மகள் சாதனைகளை படைத்த செய்திகளை நம்மால் காண முடியும். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் (Mohammad Siraj) தந்தை கூட ஆட்டோ டிரைவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mumbai Auto Rickshaw Driver

தனது தந்தையின் கடுமையான உழைப்பின் மூலம்தான், முகமது சிராஜ் பொருளாதார ரீதியிலான தடைகளை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவே கொண்டாடும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாறியுள்ளார். உண்மையில் தங்களுடைய மகன் மற்றும் மகள்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக ஆட்டோ டிரைவர்கள் மிக கடுமையாக உழைக்கின்றனர்.

இந்தியாவில் எரிபொருள் விலை (Fuel Price) மிகவும் அதிகம். எரிபொருட்களின் விலை உயர்ந்தால், ஆட்டோ டிரைவர்கள் மிக கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள். அத்துடன் கட்டணத்தில் பேரம் பேசும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் சமாளித்து தினமும் 14-15 மணி நேரம் வரை ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் கூட இங்கு இருக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஆட்டோக்களை இயக்குவதால், அதன் டிரைவர்கள் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் மும்பையில் ஒரு ஆட்டோ டிரைவர் தனது சாமர்த்தியம் மூலமாக ஒரு மாதத்திற்கு 5-8 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து கொண்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இது உண்மைதான். லென்ஸ்கார்ட் (Lenskart) நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராகுல் ரூபானி என்பவர், லிங்க்டுஇன் (LinkedIn) தளத்தில் செய்துள்ள ஒரு பதிவின் மூலம் இந்த ஆட்டோ டிரைவரை பற்றிய தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. ராகுல் ரூபானியின் பதிவின் சுருக்கம் பின்வருமாறு:

''விசா தொடர்பான பணிக்காக மும்பை நகரில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த பாதுகாவலர் நான் வைத்திருந்த பையை உள்ளே எடுத்து செல்ல அனுமதி வழங்கவில்லை. அத்துடன் பையை எங்கே வைப்பது? என்ற கேள்விக்கான பதிலையும் அவர் வழங்கவில்லை.

அங்கே பையை வைப்பதற்கான லாக்கரும் இல்லை. அப்போது என்ன செய்வது என தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ டிரைவர் என்னை பார்த்து கை அசைத்தார். சார், உங்கள் பையை என்னிடம் கொடுங்கள். அதை நான் பாதுகாப்பாக வைத்து கொள்கிறேன். இதற்கான கட்டணம் 1,000 ரூபாய்.

நான் இதை தினமும் செய்து வருகிறேன் என அந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் கூறினார். ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால் கொடுத்தேன். பின்புதான் அந்த ஆட்டோ டிரைவரின் தொழில் எப்படி நடக்கிறது? என்பது எனக்கு தெரிய வந்தது.

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சரியான நேரத்தில் அவர் ஆட்டோவை நிறுத்தி கொள்கிறார். பின்னர் அங்கு வரும் நபர்களின் பைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் சேவையை வழங்குகிறார். இதற்காக ஒருவரிடம் 1,000 ரூபாயை கட்டணமாக வசூல் செய்கிறார். ஒரு நாளைக்கு அவருக்கு 20-30 வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர்.

இதன் மூலம் மாதத்திற்கு 5-8 லட்ச ரூபாயை அவர் சம்பாதிக்கிறார். ஆனால் 20-30 பைகளை அவரால் ஆட்டோவில் வைக்க முடியாது. இதற்காக அருகே உள்ள ஒரு லாக்கரை அவர் பிடித்துள்ளார். இது ஒரு காவல் துறை அதிகாரிக்கு சொந்தமானதாகும். பைகளை எல்லாம் அவர் அங்கே கொண்டு சென்று விடுகிறார்'' இவ்வாறு ராகுல் ரூபானியின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் மும்பையை சேர்ந்த இந்த ஆட்டோ டிரைவர் தனது சாமர்த்தியம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகிப்பவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார். இதன் காரணமாக ராகுல் ரூபானியின் இந்த பதிவு சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான இடத்தில் சரியான நேரத்தில் புத்திசாலித்தனமாக தொழில் செய்தால் பணம் கொட்டும் என்பதை இந்த ஆட்டோ டிரைவர் நிரூபித்துள்ளார். பெரிதாக படிப்பு மற்றும் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் கூட, வாடிக்கையாளர்களின் பிரச்னையை சாமர்த்தியமாக தீர்ப்பதன் மூலம், ஒரு தொழில் அதிபருக்கான திறன்கள் அவரிடம் வெளிப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 14:26 [IST]
English summary
Mumbai auto rickshaw driver earns rs 5 8 lakh per month check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+