2 மணி நேரத்தில் 2000 கி.மீ போகலாம்! இந்தியாவில் கடலுக்கு அடியில் ரயில் பாதை போட போறாங்க! எந்த ஊர்ல தெரியுமா
உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் பயணங்களும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்று வேகமான பயணம் என்றால் எல்லோரும் விமானங்களை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் விமானங்களுக்கு இணையாக ரயிலிலும் பயணிக்க முடியும் என்று பலர் இனி கூறுவார்கள். அப்படியான ஒரு மாற்றம் தற்போது வரப்போகுது மும்பையிலிருந்து துபாய்க்கு கடல் வழியாக நீருக்கடியில் மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில் அறிமுகமாகவுள்ளது.
இன்று இந்தியாவின் வேகமான ரயில் என்றால் அது வந்தே பாரத் ரயில் தான். இந்த ரயிலை தாண்டி அதிகமான வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயிலின் கட்டுமானம் தற்போது மும்பை ஆமதாபாத் இடையே நடந்து வருகிறது. இது எல்லாம் உள்நாட்டு ரயில் பயணம் மட்டும் தான். அதே நேரம் வெளிநாட்டிற்கு ரயிலில் பயணிக்க துபாய் அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படியாக ரயில்பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இரு நகரங்களுக்கு இடையே கடல் வழியில் பாதை அமைக்க வேண்டும் என்றால் சுமார் 2000 கி.மீ நீளத்திற்கு பாதை அமைக்க வேண்டும். இதில் ரயில் பயணிக்கும் போது மும்பையில் இருந்து கிளம்பி 2 மணி நேரத்தில் துபாயை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு தொழிற்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். அதே நேரம் இதில் தொழிற்நுட்ப சவால்களும் உள்ளன. ரயில் வேகமாக பயணிக்கும் போது அமைக்கப்பட்ட பாதையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் பல்வேறு விதமான சோதனைக்கு இது உட்படுத்தப்பட வேண்டும். இது மட்டுமல்ல இந்த பாதையில் ரயில் பயணிக்கும் கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் காண வேண்டும் என்பதற்காக கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தற்போது வரை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. இதை செயல்படுத்த வேண்டும் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இது மட்டுமல்ல இது இரு நாடுகளும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையாக இருக்கும் தனியாக துபாய் அரசு மட்டும் செய்ய முடியாது. இந்திய அரசும் இதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் இந்த திட்டத்தில் இரு நாடுகளுக்கும் லாபம் இருக்க வேண்டும்.
இதை எல்லாம் தாண்டி இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கினால் கூட இது கட்டமைக்கப்பட 5 ஆண்டுகளாவது தேவைப்படும். அதை எல்லாம் கடந்து இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிச்சயம் இந்த ரயிலில் பயணிக்க அதிகமான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பல ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டியது உள்ளதால் இதற்கான டிக்கெட் விலையும் அதிகமாக தான் இருக்கும்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இப்படியான பாதை அமைக்கப்பட்டால் இரு நாட்டிற்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து மிகச் சிறப்பாக இருக்கும். விரைவாக துபாய் மற்றும் இந்தியா இடையே சரக்கு போக்குவரத்தை செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும். இது கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தி தரும். தற்போது கடல் வழியாக தான் இந்த சரக்குகள் எல்லாம் எடுத்து செல்லப்படுகிறது.
கடல் வழியாக பயணிக்க அதிகமான நேரம் எடுக்கிறது. இருந்தாலும் செலவுகளை குறைக்க விமான வழி இல்லாமல் கடல் வழியாகவே சரக்குகள் எடுத்து செல்லப்படுகின்றன. இதுவே கடலுக்கடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டால் அதன் மூலம் வரைவாக சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர முடியும். இது மிகப்பெரிய அளவில் போக்குவரத்து செலவு, சேமிக்கும் இடத்திற்கான செலவு என பலவிதமான சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.
இந்த பாதை அமைப்பதில் இருக்கும் மற்றொரு முக்கிய சவால் அதிக வேகமாக ரயில் பயணிக்கும் போது அது ஏற்படுத்தும் அதிர்வுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடைாது என்பது தான். அதற்காக ஹைப்பர் லூப் போல குறிப்பிட்ட வேகம் வரை மட்டுமே தண்டவாளத்தில் வீல் இருக்கும் அதற்கு பிறகு மேக்னட்டிக் ஈர்ப்பு வழியாகவே ரயில் தண்டவாளத்தில் இருந்து வீல் தனியாக பிரிந்து ரயில் பறந்து செல்லும் வகையில் இருக்கும். கிட்டத்தட்ட ஹைப்பர் லூப் மற்றும் புல்லட் ரயில் ஆகியவற்றின் திட்டங்களை தான் இதில் உட்புகுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றொரு பிரச்சனை என்றால் ரயிலின் வேகம். இந்த ரயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என்றால் தானியங்கியாக பயணிக்க வேண்டும். மேலும் அதிக திருப்பங்கள் இருக்க கூடாது. கூடுமானவரை நேரகவே ரயில் பயணிக்க வேண்டும். திருப்பங்களில் வேகமாக ரயிலால் பயணிக்க முடியாது. ரயில் கவிழ்ந்துவிட வாய்ப்புள்ளது. இதனால் பாதை அமைக்கும் போதே அதை யோசித்து திட்டத்திலேயே பாதையை பெரும்பாலும் நேராக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்த ரயிலை மனிதர்கள் இயக்கினால் பல்வேறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ரயில் போக்குவரத்தில் விபத்துக்களுக்கு மனித தவறுகளே காரணங்களாக இருந்துள்ளன. அதனால் இதை முற்றிலும் தானியங்கியாக இயக்க வைக்க வேண்டும். இதை செய்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் இந்த திட்டம் வெற்றி பெறும். துபாய் மற்றும் மும்பை இடையேயான இந்த இணைப்பு ஏற்பட்டால் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஹாலிவுட் படத்தில் கூட இப்படியான ஒரு விஷயத்தை பார்த்திருக்க மாட்டோம். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள். இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா - துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும். பின்னர் பல முக்கிய நகரங்களை இப்படியாக இணைப்பதற்கான முயற்சி நடைபெறும்.


Click it and Unblock the Notifications








