கோவாவை வெறும் 5 மணிநேரத்திற்குள் ரீச் ஆயிடலாம்... மும்பைவாசிகளுக்கு மத்திய அரசின் புதிய நெடுஞ்சாலை!!
வெறும் 5 மணிநேரத்தில் மும்பையில் இருந்து கோவாவை சென்றடையும் வகையில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகளை சமீபத்தில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை முழுமையான இனி தொடர்ந்து பார்க்கலாம்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதிலும், அவற்றை புதுப்பிப்பதிலும் நமது மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பெங்களூர் - மைசூரு இடையேயான புதிய விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

இதனை தொடர்ந்து, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை - டெல்லி இடையேயான விரைவுச்சாலை ஒவ்வொரு பகுதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டின் இரு முக்கிய மாநகரங்களை இணைக்கும் விரைவுச்சாலை என்பதால், இது முழுவதுமாக பயன்பாட்டிற்கு வந்த பின் நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்தின் தரம் பல மடங்கு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை - கோவா இடையேயும் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை-கோவா இடையேயான நெடுஞ்சாலை பணிகளை பார்வையிட்டு, அதுகுறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை எண்.66 ஆக உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய விரைவுச்சாலை அடுத்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
कोकण, महाराष्ट्र प्रवास. pic.twitter.com/dRzZqXKoRp
— Nitin Gadkari (@nitin_gadkari) March 30, 2023
ஏனெனில் இந்த புதிய நெடுஞ்சாலை பணிகள் இந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவு பெற்றுவிடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். இந்த புதிய நெடுஞ்சாலையினால் மும்பை- கோவா இடையேயான பயணம் நேரம் ஆனது ஏறக்குறைய 4 மணிநேரம் 30 நிமிடங்களாக குறையும். மும்பை, கோவா இடையேயான தொலைவு 600 கிமீ ஆகும். இதனை தற்போதைய என்.எச்48 சாலை வழியாக கடக்க தற்சமயம் ஏறக்குறைய 11 மணிநேரங்கள் தேவைப்படுகிறது.
புதிய மும்பை-கோவா நெடுஞ்சாலை 66 மொத்தம் 10 கட்டங்களாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கட்டங்கள் இன்னும் கட்டமைத்து முடிக்கப்படவில்லை. "வருகிற டிசம்பருக்குள் மொத்த தொலைவிற்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் மற்றும் இடைப்பட்ட தொலைவை 4.30 மணிநேரத்தில் கடந்துவிடலாம்" என சமீபத்திய சோதனை ஆய்வுக்கு பின் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

காஷேடி காட் என்ற பகுதி வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையில் 2 சுரங்கங்கள் அமைய உள்ளன. இந்த சுரங்கங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர், "இதில் ஒரு சுரங்கத்தை இந்த ஆண்டின் மழைக்காலம் துவங்குவதற்கு முன் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியும். மீதி இருக்கும் சுரங்க பணிகள் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
நாட்டின் பொருளாதாரம் மேம்பட இவ்வாறான புதிய புதிய நெடுஞ்சாலைகள் அவசியமானது ஆகும். ஏனெனில் இதன் மூலமாக, கோவா பகுதிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் மூலமாக கோவா-மும்பைக்கு இடையே உள்ள கிராமங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும். டெல்லி - மும்பை விரைவுச்சாலை உடன் புதிய என்.எச்66-ஐ இணைத்து, டெல்லியில் இருந்து விரைவாகவே சாலை வழியாக கோவாவை அடையும் வகையில் கொண்டுவருவார்கள்.


Click it and Unblock the Notifications








